வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (21/12/2017)

கடைசி தொடர்பு:16:00 (21/12/2017)

`செல்போனை இன்று 100 கோடி பேர் பயன்படுத்துகிறார்களே அது குற்றமா?' ஆ.ராசா ஊரில் அதிர்ந்த தொண்டர்கள்

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பி 2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க தொண்டர்கள் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி மாவட்டத்தையே அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று காலையில் டெல்லி சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உட்பட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கினார். 2 ஜி ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சத்துக்கு 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகச் சி.பி.ஐ குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அறிவிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு டிசம்பர் 21-ம் தேதி இறுதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். காலை 11 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பளித்தார். அப்போது, அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். தீர்ப்பு வெளியானதும் டெல்லி, பெரம்பலூர் மற்றும் தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

வெடி வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கிக்கொண்டிருந்த குமார் என்பவர் நம்மிடம் பேசினார், ''ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதி ஷைனி குடும்பம் நலமுடன் வாழ வேண்டும். இந்தத் தீர்ப்பால் ஒட்டுமொத்த தி.மு.க-வினர் சந்தோசத்தில் மூழ்கியிருக்கிறார்கள். எங்கள் மாவட்டத்தில் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் ராசா. இம்மாவட்டத்தில் இன்னும் 10 வருடத்துக்கு எந்தத் திட்டங்களை கொண்டு வந்தாலும் அவரது பெயர் அந்தத் திட்டத்தில் இருக்கும். ஏனென்றால் எங்கள் மக்களுக்கு என்னென்ன  செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே செய்ய கூடியவர்.

மக்களுக்கு நல்லது செய்தால் குற்றமா எங்களுக்கு ஒரு கேள்வி எழுகிறது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை 5 பேர் வசமே இருந்ததைப் பரவலாக ஏலம் விட செய்தாரே அது குற்றமா. அப்படி ஏலம் விட்டதால் இந்தியாவில் 25 லட்சம் பேர் பயன்படுத்திய கைபேசி இன்று 100 கோடி பேருக்கு மேல் பயன்படுத்துகிறார்களே அது குற்றமா, 1 ரூபாய்க்கு பேசிய கட்டணத்தை 30 பைசாவுக்கு குறைக்கச் செய்தாரே அது குற்றமா. பயன்படுத்தப்படாமல் இருந்த 40% அலைக்கற்றைகளை நாட்டு மக்களுக்குப் பயன்படுத்த வழிவகை செய்தாரே அது குற்றமா வேண்டுமென்றே ஊடகங்களால் பெரிதுபடுத்தபட்டு தி.மு.க மீது களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அந்தக் களங்கம் இந்தத் தீர்ப்பால் அழிந்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் மக்கள் சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள். மீண்டும் தி.மு.க ஆட்சியைப் பிடிப்பது உறுதி'' என்றார் கொண்டாட்டத்துடன்.