வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/12/2017)

கடைசி தொடர்பு:16:20 (21/12/2017)

2,500 கி.மீ பறந்து வரும்... விகடகவி செய்யும் பழுப்பு கீச்சான் பறவை!

சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து 2,500 கி.மீட்டர் கடந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வந்துவிட்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டும் திரும்பிச் செல்லுகிறது பழுப்பு கீச்சான் பறவை. இந்தப் பழுப்பு கீச்சான் பறவை சிட்டுக்குருவி மாதிரி இருந்தாலும் தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிகம் உள்ள உயிரினங்களை வேட்டையாடும்'' என்கிறார் ஏற்காடு அறிவியல் எழுத்தாளர் இளங்கோ.

மேலும் இவர், ''இப்பறவை தென்கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் மட்டுமே வாழ்கிறது. இது ஒரு சிறிய பறவையாகும். ஆண் பறவை 27-34 கிராமும் பெண் பறவை 28-37 கிராமும் கொண்டிருக்கும். இப்பறவையின் மேல்புறம் பழுப்பு நிறம் கொண்டது. ஆண் பறவையின் தலை அடர்ந்த பழுப்பு நிறமும் பெண் பறவையின் தலை சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். பறவையின் கண்களைச் சுற்றி ஒரு கறுப்பு வளையம் உள்ளது. இது கொள்ளைக்காரனின் முகமூடி போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.
கண்ணைச் சுற்றியுள்ள கறுப்பு முகமூடி பளபளப்பாகவும் அதன் மீது வெள்ளை நிற புருவமும் இருக்கும். இறக்கைகள் பழுப்பு நிறமாக உள்ளன. இப்பறவைகளுக்கு வால் வட்ட வடிவில் உள்ளன. ஆண் பறவைகள் ஜன் - ஜன் - ஜூன் மற்றும் கிச்சி - கிச்சி - கிச்சி எனப்பாடும். அதே சமயத்தில் தனக்குப் போரடிக்கும்போது மற்ற பறவைகளின் குரலில் பாட ஆரம்பிக்கும். அதாவது, போலிக்குரல் எழுப்பி விகடகவி செய்யும்.

இதன் முக்கிய உணவு பூச்சிகள், பல்லிகள், ஓணான், தவளை போன்றவையாகும். மேலும் அணில், சுண்டெலி, வெளவால், சிறு பறவைகள் என வேட்டையாடி உண்கிறது. இது முட்புதரின் மீது அமர்ந்து இருக்கும். இரையின்மீது திடீர் தாக்குதல் நடத்தும். தன்னைவிட பெரிய இரையை வேட்டையாடும் திறமை கொண்டது. வேட்டையாடுவதில் புதிய யுக்தியைப் பின்பற்றும் வேட்டையாடிய சுண்டெலி, ஓணான், வெளவால் போன்றவற்றை மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக்கொண்டு நிதானமாகத் தன் அலகால் கிழித்து உண்ணும். இதனால் இதைக் கசாப்புக்காரக் குருவி என்றும் அழைப்பார்கள். வேறு விலங்குகள் பறவைகள் அங்கு நெருங்கினால் அதைத் துரத்தி விரட்டும். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே ஒரு பறவைக்கு தாய் நிலமாகும் என்பதால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் தன் சொந்த நாடான தெற்காசிய நாட்டுக்குச் சென்றதும் மே அல்லது ஜூன் மாதத்தில் இனப்பெருக்கம் செய்து பெண் பறவை 2-6 முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கும்'' என்று தெரிவித்தார் இளங்கோ.