வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/12/2017)

கடைசி தொடர்பு:18:00 (21/12/2017)

`கரும்பை வெட்டலன்னா, காய்ஞ்சு கருகிடும்' - ஓர் விதவை பெண் விவசாயியின் சோகக்கதை

''தனது கரும்புத் தோட்டத்தில் தான் விளைவித்த கரும்பை வெட்டவிடாமல் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் தடுத்து பிரச்னை செய்தனர்'' என்று கணவனை இழந்த விதவை விவசாயி வேதனையுடன் கூறினார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது குப்புச்சியாக்கவுண்டனூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி கமலா. கணவனை இழந்த விதவையான இவர், தன் வாழ்வாதாரத்துக்கந்த் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் ஆலைக் கரும்பு பயிரிட்டு வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அருகில் உள்ள புகழூரில் இருக்கும் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார் கமலா. ஆனால், ஒப்பந்தத்தை மீறி காலத்தோடு கரும்பை வெட்டாமல் ஆலை நிர்வாகம் இழுத்தடிப்பதாகவும் குறைவான விலையை தருவதாகவும் கமலா புலம்பினார். அதோடு, புகழூர் ஈ.ஐ.டி ஆலை மூடப்பட, கரும்பு அதே நிறுவனத்தின் மற்றொரு ஆலையான 70 கிலோ மீட்டர் தூரம் தள்ளி திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலையில் இருக்கும் ஆலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை. இதனால், கமலா நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் வெல்லமண்டி ஆலைக்கு கரும்பை விற்றுள்ளார் கமலா.

இதனால், அந்த வெல்லமண்டி நிர்வாகத்தினர் கரும்பை வெட்ட வந்தனர். ஆனால், ஈ.ஐ.டி ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் ஸ்பாட்டுக்கு வந்து, `ஒப்பந்தத்தை மீறி கரும்பை வெட்டக் கூடாது' என்று தடுத்தனர். ஆனால், கமலா கரும்பை வெட்ட அனுமதிக்க, கோபமான ஆலை அதிகாரிகள் கரும்பை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே தர்ணா செய்தனர். இதற்கிடையில், அங்கே குழுமிய மற்ற விவசாயிகளும் கமலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில், 'வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெட்டலாம். இப்போது வெட்ட வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

இதுபற்றி, கமலாவிடம் பேசினோம். "கரும்பு வெட்ட வேண்டிய பருவம் கடந்துவிட்டது. கரும்பெல்லாம் காய்ந்து, சுருங்கத் தொடங்கிவிட்டது. பலமுறை ஈ.ஐ.டி ஆலை தரப்பிடம், `கரும்பை வெட்டுங்கள்'ன்னு சொல்லியும் அவங்க வெட்டலை. அதோட, கரும்பு டன்னுக்கு குறைவான தொகையைத் தர்றதா சொன்னாங்க. புகழூர்ல இருந்த ஈ.ஐ.டி சர்க்கரை ஆலையையும் மூடிட்டாங்க. இதனால், எங்க கரும்பை அவங்களோட பேட்டைவாய்த்தலை கிளை ஆலைக்கு வெட்டி எடுத்துட்டுப் போக வேண்டிய சூழல். ஆனால், கரும்பை அவங்க இப்ப வெட்டுறாப்புல தெரியலை. அதனால்தான், நாமக்கல் மாவட்ட வெல்லமண்டி ஆலைக்கு கரும்பை விற்றேன். அதிகாரிகள் தடுத்தா என்ன, அவங்க ஒப்பந்தத்தை மீறி செயல்படும்போது, கரும்பை விளைவிச்ச நான் ஒப்பந்தத்தை மீறுறதுல என்ன தவறு. இப்பயும் கரும்பை வெட்டலன்னா, அந்தக் கரும்புல ஒண்ணுமே இருக்காது. காய்ஞ்சு கருகிடும்" என்றார் வேதனையாய்.