`பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை' - சாகித்ய அகாடமி விருது குறித்து யூமா வாசுகி #Vikatanexclusive | No expectation about sahitya academy award says Yuma vasuki

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (21/12/2017)

கடைசி தொடர்பு:16:30 (21/12/2017)

`பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை' - சாகித்ய அகாடமி விருது குறித்து யூமா வாசுகி #Vikatanexclusive

சாகித்ய அகடமி விருது

மத்திய அரசின் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான மொழிபெயர்ப்பு விருதுகளுடன் முக்கிய விருது குறித்த முடிவையும் இன்று டெல்லியில் கூடிய சாகித்ய அகாடமியின் வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது, தமிழில் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ எனும் நூலை, ‘கசாக்கின் இதிகாசம்’ எனத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் யூமா வாசுகியிடம் தெரிவித்துவிட்டு, விருது குறித்து அவருடன் பேசினோம். அரை மணி நேரத்துக்குப் பின்னர் பேசமுடியுமா என்றவரை இடைமறித்து, சுருக்கமாகச் சொல்லக் கேட்டோம்.

இந்த விருதை அல்லது இப்படியொரு விருதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

``இல்லை... அப்படியொன்றும் பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை. இந்தப் புத்தக மொழிபெயர்ப்புக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.” 

இந்தப் புத்தகத்துக்கு விருது கிடைத்தது பற்றி?

“கசாக்கிண்ட இதிகாசம் நாவல் ரொம்ப முக்கியமானது. ஏறத்தாழ 60-களில் வெளிவந்தது. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் நவீனத்தோடும் கலையழகோடும் இருக்கிறது. ஏற்கெனவே இதைப் படித்திருக்கிறேன். நான் அதைப் படித்து ரொம்ப காலத்துக்குப் பிறகு, காலச்சுவட்டில் மொழிபெயர்க்குமாறு கேட்டார்கள். எனக்குப் பிடித்த ஒரு படைப்பு என்பதால், ஆர்வத்தோடு செய்தேன். நல்ல வேலையைச் செய்த திருப்தி இருக்கிறது”. 

முன்னதாக, இதே நூலுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான 2015 விகடன் விருது, யூமா வாசுகிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.