வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/12/2017)

கடைசி தொடர்பு:20:00 (21/12/2017)

ஒரு ரூபாய் ஊறுகாய்க்கும் ஜி.எஸ்.டி - அருண்ஜெட்லியிடம் வேதனைப்பட்ட சிறு வியாபாரிகள்

``புண்ணாக்கு, விபூதி, ஊறுகாய், மோர் மிளகாய்க்கு ஜி.எஸ்.டி-யை குறையுங்கள்'' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள் சிறு வியாபாரிகள்.
இதுதொடர்பாக டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சரிடம் இன்று கோரிக்கை மனு அளித்திருக்கும் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷிடம் பேசினோம், "மத்திய அரசு ஆறு மாதத்துக்கு முன் கொண்டு வந்த ஜி.எஸ்.டி-யால் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமல்ல சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரு வியாபாரிகள்கூட தங்கள் லாபத்தில் இழப்பு என்று சமாளித்துக்கொள்வார்கள்.

புண்ணாக்கு ஊறுகாய்

ஆனால், சிறுவியாபாரிகளுக்கு முதலுக்கே மோசம் என்பதுபோல நிலைமை உள்ளது. பலவித உணவு பொருள்களுக்கும் வரியைக் குறைக்கவும் வரி விலக்கு அளிக்கவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியைச் சந்தித்து மனு அளித்தோம். ஜி.எஸ்.டி-யால் பல்வேறு பிரச்னைகளை வியாபாரிகள் சந்தித்து வருகிறார்கள். ஒரு ரூபாய்க்குப் பொட்டலம் போட்டு விற்கப்படும் ஊறுகாய்க்கு ஜி.எஸ்.டி போட்டுள்ளார்கள். மிளகாயை மோரில் ஊறவைத்து காயவைத்து விற்றால் ஜி.எஸ்.டி. இப்படி 1,000 ரூபாய் முதலீட்டில் செய்யும் குடிசைத்தொழிலுக்கெல்லாம் ஜி.எஸ்.டி-யை விதித்துள்ளார்கள். இதுபோன்ற தொழில்களுக்கு போடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஊறுகாய்க்கு வரி குறைக்கவும் 50 கிராமுக்கு கீழான பாக்கெட்டுகளுக்கு வரி விலக்களிக்கவும் சீனி மிட்டாய், குளிர்பானங்கள், புண்ணாக்கு, விபூதி, பிஸ்கட் போன்றவற்றுக்கும் வரியைக் குறைக்கவும் கேட்டுள்ளோம். வரியைக் குறைத்தால்தான் சாதாரண வியாபாரிகள் வாழ முடியும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க