`விருது வேண்டாம்’ - மறுத்த இன்குலாப் குடும்பம் | Inquilab family rejects Sahitya Akademi award

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (21/12/2017)

கடைசி தொடர்பு:19:54 (21/12/2017)

`விருது வேண்டாம்’ - மறுத்த இன்குலாப் குடும்பம்

கவிஞர் இன்குலாபுக்கு, அவர் மறைவுக்குப் பிறகு இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. 


மத்திய அரசின் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் குறித்து டெல்லியில் கூடிய சாகித்ய அகாடமியின் வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. `காந்தாள் நாட்கள்’ கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’ எனும் நூலை, ‘கசாக்கின் இதிகாசம்’ எனத் தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நிலையில், கவிஞர் இன்குலாபின் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்துவிட்டது. இதுதொடர்பாக அவர் மகள் ஆமீனா, சாகித்ய அகாடமியின் இயக்குநருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘கவிஞர் இன்குலாப் குரலற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அறியப்பட்டவர். அவருக்கான அங்கீகாரம் என்பது மக்கள் கவிஞர் என்பதாகவே இருக்கும். அரசு அளிக்கும் இதுபோன்ற அங்கீகாரங்களை அவரை தேசிய அளவில் கொண்டுசேர்க்கும். ஆனால், கவிஞர் இன்குலாப், தன் வாழ்நாளில் அரசு வழங்கிய எந்த விருதையும் ஏற்றுக்கொண்டதில்லை. `விருதுகளையும் கௌரவங்களையும் எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை’ என்பார். அரசின் முகங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அது ஒரே முகமூடியையே அணிந்திருக்கிறது. இன்றையச் சூழலில் வன்முறைகள் ஊக்கமாக நடக்கின்றன. அதேபோல் வகுப்புவாதம், மதவாதம் மற்றும் ஒடுக்குதல் போன்றவையும் நடக்கின்றன. கவிஞர் இன்குலாபின் படைப்புகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. அதுவே ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். அந்தவகையில், கவிஞர் இன்குலாபின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த விருதை ஏற்றுக்கொள்வதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக கவிஞர் இன்குலாபின் மகள் மருத்துவர் ஆமினாவைத் தொடர்புகொண்டு பேசினோம், ‘அரசு அளிக்கும் விருதுகளை ஏற்காத அப்பாவின் பாரம்பர்யத்தைக் காக்கவே, சாகித்ய அகாடமி விருது வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக சாகித்ய அகாடமி அமைப்பின் இயக்குநருக்கு நான் இ-மெயில் அனுப்பிவிட்டேன். அதுகுறித்த அதிகாரபூர்வ பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’ என்றார். இன்குலாப் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளையின் இயக்குநராகவும் மருத்துவர் ஆமீனா இருந்துவருகிறார்.