Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2ஜி தீர்ப்புக்குக் கனிமொழியின் ரியாக்‌ஷன்...! #2GScamVerdict

கனிமொழி

ந்தியாவையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா எம்.பி-யுமான கனிமொழி உள்பட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஒரே வரியில் தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின்னர், தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தைப் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

2ஜி முறைகேடு வழக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் கனிமொழிக்கு மிகுந்த மன உளைச்சலையும், வருத்தத்தையும் அளித்துவந்தது. இதனால் அவர், அரசியலிலும், அரசியல் சார்ந்த சில பிரச்னைகளிலும் முக்கிய முடிவு எடுக்கச் சிரமப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டதால், மற்ற கட்சியினர் அவரை எந்தச் செயலிலும் ஈடுபடவிடாமல் செய்தனர். வழக்குத் தொடர்பான தீர்ப்புக்காக 6 வருடங்கள் காத்திருந்தவருக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது. வழக்கு முடிவுக்குப் பின்னர் அவர் பத்திரிகை குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "எப்போதும் இருளின் முடிவில் வெளிச்சம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த ஒருநாளுக்காகத்தான் ஆறு ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். இந்த ஆறு ஆண்டுகள் எத்தனை வருத்தம் நிறைந்ததாக இருந்தது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 176 ஆயிரம் கோடி ரூபாயில் முறைகேடு எனப் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டது. நான் ஒரு கம்பெனிக்கு 20 நாள்கள் இயக்குநராக இருந்த ஒரே காரணத்துகாகக் குற்றம்சாட்டப்பட்டேன். முரணாக நான் அந்தக் கம்பெனியில் ஒரு போர்டு மீட்டிங்கில்கூடக் கலந்துகொண்டதில்லை; ஒரு கையெழுத்தும் போட்டதில்லை. தி.மு.க., அப்போதைய தேர்தலில் தோற்ற ஐந்து மாதங்களில்தான் நான் இந்த வழக்கில் உள்ளிழுக்கப்பட்டேன். மனதால் கணக்கிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கான தொகையில் நான் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதற்கு ஒரே காரணம், தலைவர் கருணாநிதியின் ஆட்சி அடுத்த ஐந்து ஆண்டுகள் நடைபெறக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்ளத்தான்.

கனிமொழி வெளியிட்ட பத்திரிகை குறிப்பு

நான் ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர். என்னுடைய பணி அரசியல்வாதியாக இருப்பது அல்ல... இந்த வழக்கில் நான் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டேன். இதிலிருந்து விடுதலை செய்யப்பட்ட  இன்றைய தினத்தில் நான் சொல்கிறேன், ஒருவேளை அரசியல் மூலமாகப்  பணம் சம்பாதிப்பது என்னுடைய நோக்கமாக இருந்திருந்தால், 20 வயதிலேயே பத்திரிகைத் துறையில் சேர்வதற்குப் பதிலாக அரசியலுக்கு வந்திருப்பேன். ஆனால், நான் 40 வயதில்தான் அரசியலில் நுழைந்தேன். அதுவும் என்னுடைய தேவை கட்சியில் இருந்தது. எனக்குப் பதவி ஆசை இருந்திருந்தால், என்றோ நான் அமைச்சர் ஆகியிருப்பேன். ஆனால், பதவி கிடைத்தும் நான் அதை  நிராகரித்துவிட்டேன். நான் இந்த வழக்கில் தவறுதலாக உள்ளே இழுக்கப்பட்டேன், அது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்பு எனக்கான விடுதலையைக் கொடுத்துள்ளதை அடுத்து, என்னுடைய கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்... தமிழக மக்களுக்காக உழைப்பேன். கடினமான இந்த ஆறு வருடங்களில் உடன் இருந்த குடும்பத்துக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் உள்ளார்ந்த நன்றி" என்று அதில் தெரிவித்துள்ளார். 

2ஜி வழக்கின் இடைப்பட்ட காலத்தில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கத் தடையிருந்தாலும், அவர் சமூகப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்தபடியும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கியபடியும் இருந்து வருகிறார். நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவுக்காகப் பேசியது, நீட் தேர்வை எதிர்த்து மாநிலங்களவையில் குரல்கொடுத்தது, எண்ணூரில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கிருக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது, திருவள்ளூரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் மாணவிகளை வெறும் கைகளால் கழிவறையைச்  சுத்தம் செய்யவைத்த ஆசிரியர்களைக் கண்டித்து குரல்கொடுத்தது போன்றவை இதில் அடக்கம். சமூகத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர் இப்போது வழக்கிலிருந்து விடுதலையாகியிருக்கும் நிலையில், கட்சியிலும் மீண்டும் ஆக்டிவ்வாக இருப்பாரா... அரசியலில் இவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என தி.மு.க வட்டாரங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ