வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (21/12/2017)

கடைசி தொடர்பு:19:44 (21/12/2017)

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ எடுக்கப்பட்டது எப்போது? தினகரன் விளக்கம்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ என்று குறிப்பிட்டு டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ தொடர்பாக டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்காகப் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக விசாரணை ஆணையம் எனக்கு சம்மன் அளித்தால் நான் அளிக்கத் தயார் என்று முன்னரே கூறியிருந்தேன். இப்போதும் விசாரணை ஆணையத்தில் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவர் சிகிச்சைப் பெறுவதை, சசிகலா வீடியோ எடுத்தார். அந்த வீடியோ 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ பிப்ரவரி மாதத்திலிருந்து என்னிடம் உள்ளது. அதனை வெளியிட வேண்டும் என்று தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட பலரும் என்னிடம் கேட்டுவந்தனர். ஆனால், சசிகலாவுக்கும், எனக்கும் அதில் விருப்பம் இல்லை. நான்தான், அந்த வீடியோவை வெற்றிவேலுக்குக் கொடுத்திருந்தேன். அவர், எனக்குத் தெரியாமல் அந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார். சிகிச்சை வீடியோ எங்களிடம் இருப்பது, அமைச்சர்கள் பலருக்கும் தெரியும். தேர்தலுக்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதா சிசிச்சை பெறுவதுபோன்ற வீடியோவை வெளியிட்டுதான் வாக்கு வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை' என்று தெரிவித்தார்.