சப்-இன்ஸ்பெக்டராக இருந்து நீதிபதியாக உயர்ந்த ஓ.பி.ஷைனியின் அதிரடித் தீர்ப்புகள்!

மிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த 2ஜி வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு இணையாக மக்களின்  எதிர்பார்ப்பை எகிறச்செய்த வழக்கு இது. விசாரணை இரு மாதங்களுக்கு முன்னரே, முடிந்துவிட்டாலும் தீர்ப்பு அளிக்கப்படும் நாள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. `தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில், போதிய ஆதாரங்களை சி.பி.ஐ தரப்பில் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறி ஓ.பி. ஷைனி தீர்ப்பில் கூறியுள்ளார். தீர்ப்பு முடிவு, தி.மு.க தலைமை மற்றும் தொண்டர்களுக்கு அளவில்லாத உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. நீதிபதி ஷைனி

தற்போதைய தீர்ப்பு தி.மு.க-வுக்குச் சாதகமாக இருந்தாலும், வழக்கு விசாரணை தொடங்கிய காலகட்டத்தில் தி.மு.க தரப்புக்கு கிலி ஏற்படுத்தியவர் ஷைனி. நீதித் துறையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கண்டிப்புமிக்கவர். கனிமொழி சிறைக்குச் செல்வதற்கு இவரின் கண்டிப்பும் ஒரு காரணம். `பெண் என்பதைக் காரணம் காட்டி கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று விண்ணப்பித்தபோதெல்லாம் கொஞ்சமும் கருணை காட்டாதவர். `பெண் என்றாலும் அவர் அதிகாரமிக்க அரசியல்வாதி, வெளியே விட்டால், சாட்சியங்களை அழிக்க நேரிடலாம்' எனக் கனிமொழியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதனால், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லி திகார் சிறையில் ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டனர். அப்போது, ``இப்படிப்பட்ட ஒரு நீதிபதிகிட்டயா என் மகள் மாட்டிக்கிட்டா'' என்று ராசாத்தி அம்மாள் கண்ணீர்விட்டாராம். வயது முதிர்வு, உடல் நிலையைக் காரணம் காட்டி, தயாளு அம்மாளை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைகூட ஷைனி ஏற்றுக்கொள்ளாமல், அவரது உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அனுப்ப உத்தரவு பிறப்பித்தவர்.

2ஜி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, டெல்லி காவல் துறையில் 1981-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றினார். 1987-ம் ஆண்டு நீதிபதி தேர்வு எழுதி தேர்வானார்.  ஹரியானாவில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, தற்போது 63 வயதாகிறது.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு, 2ஜி வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது.  இதையடுத்து, 2011-ம் ஆண்டு முதல் இந்த வழக்கை ஓ.பி.ஷைனி விசாரித்துவந்தார். எவ்வளவு  செல்வாக்குமிக்கவராக இருந்தாலும், விசாரிக்க வேண்டும் என்று கருதினால் தயக்கமில்லாமல் சம்மன் அனுப்பிவிடும் வழக்கமும் இவருக்கு உண்டு. 

இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு  Criminal Procedure Code (CrPC) என்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பார்தி ஏர்டெல் தலைவர் பார்தி மிட்டல், ஹட்ஸிசன் மேக்ஸ் தலைவர் ஆஷிம் கோஷ், ஸ்டெர்லிங் செல்லுலர் நிறுவனத் தலைவர் ரவி ரூயா ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்தவர். 2ஜி வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருத்தப்பட்டது நீரா ராடியா பேச்சு அடங்கிய பதிவுகள். நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பல கேள்விகளுக்கு மழுப்பலாக நீரா ராடியா பதிலளித்தார். நீரா ராடியாவிடம் கண்டிப்பு காட்டி, பதில்களைப் பெற்றுள்ளார் ஷைனி. 

நீதிபதி சைனி நடத்திய வழக்கில் விடுதலை பெற்ற கனிமொழி

நாட்டை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்துள்ளார். விளையாட்டு உலகத்தை உலுக்கிய காமன் வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் சுரேஷ் கல்மாடியை சிறைக்கு அனுப்பியவர் இவர்தான். சுரேஷ் கல்மாடியும் அரசியலில் செல்வாக்குமிக்கவர்தான். மத்திய அமைச்சராக இருந்தவர்.  தேசிய அலுமினியம் நிறுவன ஊழல் வழக்கை  (NALCO) விசாரித்தபோது, அந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.கே.ஸ்ரீவஸ்தாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தார் ஷைனி. 

டெல்லி, செங்கோட்டையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப்படை வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி முகமது ஆரிஃப்புக்கு தூக்குத்தண்டனை விதித்தவர் இவர்தான். பிற குற்றவாளிகள் ஆறு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, எம்.எஸ். ஷபார்வால், 2002-ம் ஆண்டு ஓய்வுபெற்றுவிட, அதற்குப் பிறகு வழக்கை விசாரிக்க பிற நீதிபதிகள் மறுத்தனர். இந்த வழக்கில் பல குழப்பங்கள் இருப்பதாகவும்  காரணம் சொன்னார்கள். ஏனென்றால், முக்கிய வழக்குடன் தொடர்புடைய ஐந்து  வழக்குகளை விசாரிக்கவேண்டிய அவசியம் இருந்தது. 300 சாட்சியங்கள் இருந்தன. ஆனால், ஓ.பி.ஷைனி இந்த வழக்கை சவாலாக ஏற்று விசாரணை நடத்தி, முகமது ஆஃரிப்புக்குத் தூக்குத்தண்டனை விதித்தார். 

இப்படிப்பட்ட கண்டிப்பான நீதிபதியின் தீர்ப்பு கனிமொழி, ஆ.ராசாவை விடுதலை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!