'சத்தத்தைக்' குறைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்! மகிழ்ச்சியில் கரூர் மக்கள்

 

கரூர் மாவட்டத்தில் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் இஷ்டத்துக்கு காற்றொலிப்பான்களைப் பொருத்தி கடும் சத்தம் எழுப்பி வந்த 64 பேருந்துகளில் இருந்த காற்றொலிப்பான்களைப் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன்.

கரூர் மாவட்டம் தமிழகத்தின் மையத்தில் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அதிகம். இந்த மாவட்டத்தில் தனியார் பேருந்துகளும், மினி பேருந்துகளும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தங்கள் பேருந்துகளில் அதிக ஒலியை எழுப்பும் காற்றொலிப்பான்களைப் பொருத்தி, அதிக ஒலியை எழுப்பி வந்தனர். இந்த விவகாரம்குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால், பேருந்துகளில் பயணம் செய்பவர்களும், அந்தப் பேருந்துகளை கிராஸ் செய்யும் மற்ற வாகன ஓட்டிகளும் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகினர். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறையிடமும் புகார் செய்தனர். 

இதைத்தொடர்ந்து, கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரதீபா, ரவிச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் அடங்கிய படை கரூரில் ஆய்வுமேற்கொண்டது. அந்த வகையில், பொதுமக்களுக்கு இடையூறான வகையிலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் 64 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் பலகுரல் காற்றொலிப்பான்களை அகற்றினர். இதுபற்றி பேசிய, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன், "இதுபோல் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் பலகுரல் காற்றொலிப்பான்களை இனி யாரும் பயன்படுத்தக் கூடாது. எங்களது இந்த அதிரடி ஆய்வு இனி தொடரும்" என்றார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!