வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (22/12/2017)

கடைசி தொடர்பு:08:36 (22/12/2017)

வனத்துறைக்கு இவங்க புதுசு... ஆனால், பிரச்னை பழசு..!

'நாங்க பத்து பேர்… எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது' என்று `காக்க காக்க' பட ரேஞ்சில், கோவையில் வனவிலங்குகள் நடமாடும் ஏரியாவில் களப்பணிக்கு வரும் வனத்துறையின் ஒரு டீம்தான், ஆர்.ஆர்.டி என்றழைக்கப்படும் “Rapid Response Team". மனித – வன விலங்கு மோதல் அதிகம் உள்ள கோவையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த டீம் அமைக்கப்பட்டது.

ஆர்.ஆர்.டி

மொத்தம் பத்து பேர்… அதில் சிலர் பட்டதாரி இளைஞர்கள். 180042545456 என்ற 24 மணிநேர டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்தால், கோவையின் எந்தப் பகுதிக்கும் வந்து இறங்குவார்கள். கோவையில், கடந்த சில மாதங்களாக யானை சம்பந்தப்பட்ட விவகாரத்தில், வனத்துறைக்கு பக்கபலமாக இருந்தது இவர்கள்தான். டீம்தான் புதுசு, ஆனால், வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு இருப்பதுபோல, இவர்களின் பிரச்னை பெருசு என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “மாதம் ரூ.6,750 அவர்களுக்கு சம்பளம். அதுவும் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் கிரெடிட் ஆகும். வேட்டைத் தடுப்பு காவலர்கள் செய்யும் பல பணிகளை இவர்களும் செய்துவருகின்றனர். சில வனத்துறை அதிகாரிகள், தங்களது தனிப்பட்ட வேலைகளுக்கெல்லாம் இந்த இளைஞர்களைப் பயன்படுத்திவருகிறார்கள். வேட்டைத் தடுப்பு காவலர்களோ, இந்த இளைஞர்களோ ஸ்டிரைக் செய்தால், வனத்துறையின்பாடு திண்டாட்டம்தான்.  பல வருடங்களாக இருக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கே, சமீபத்தில்தான் ஊதியம் உயர்த்தப்பட்டது. இவர்களையெல்லாம் வனத்துறை கண்டுகொள்ள மாட்டாது” என்றனர்.

யானை

வனத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்,  “அரசாணைப்படி அவர்களுக்கு 4 மாதங்கள்தான் பணி. கோவையில் தேவை அதிகம் இருப்பதால், நாங்கள் வேறுவேறு திட்டங்களுக்காக அவர்களைப் பயன்படுத்திவருகிறோம். அரசாணைப்படி அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சம்பளம்தான் வழங்கி வருகிறோம்” என்றனர்.

ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குதான் பணி, அவர்களுக்கான ஊதியம் என்ன என்பது பற்றிய விவரங்கள் ஆர்.ஆர்.டி-யில் இருப்பவர்களுக்கே தெரியாது என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், வனத்துறையில் இப்படி ஒரு டீம் தொடங்கப்பட்டது, அந்தத் துறையின் அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசனுக்கே ஆரம்பத்தில் தெரியாதாம். அண்மையில், நிகழ்ச்சி ஒன்றுக்காக, கோவை வந்த அமைச்சர் இந்த டீம் குறித்து கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டாராம்.