வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (22/12/2017)

கடைசி தொடர்பு:08:10 (22/12/2017)

ஒகி புயல் தொடர்பான வழக்கு: தமிழக அரசின் பாகுபாட்டை சாடிய நீதிமன்றம்

ஒகி புயலில் உயிரிழந்த அனைவருக்கும் 20 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கக்கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். 

 

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்காந்தி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "ஒகி புயலால் குமரி மாவட்ட மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  இந்நிலையில், உரிய நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக அரசு ஒகி புயலில் உயிரிழந்த  மீனவர்களின் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயையும், உயிரிழந்த குமரி மாவட்ட மக்களுக்கு 10 லட்ச ரூபாயையும் இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், ஒகி புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது இரு பக்கங்களிலும் சமமான ஒன்றே. உயிரிழந்த மீனவ குடும்பத்தினருக்கு  20 லட்ச ரூபாயையும், பொது மக்களுக்கு 10 லட்ச ரூபாயையும் வழங்குவதில் பாகுபாடு உள்ளது. ஆகவே, ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் 20 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, பாகுபாடின்றி ஒகி புயலில் உயிரிழந்த அனைவருக்கும் 20 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த  மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.