அப்போது சவப்பெட்டி பிரசாரம், இப்போது வீடியோ... அடுத்து? - வீடியோ வெளியிட்டவருக்கு ஒரு கடிதம்

வீடியோ

ணக்கம்...வீடியோ வெளியீட்டாளர்களே, 

இரண்டு நாள்களுக்கு முன்பு நீங்கள் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோலத்தைப் பார்த்தல்ல, அதை நீங்கள் ‘தகுந்த’ சமயத்தில் வெளியிட்டதை நினைத்து...

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஒருபுறம், அவர் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் பற்றி அ.தி.மு.கவில் தலைவர்கள் என்று சொல்லப்படுகிற ஒவ்வொருவரும் தினமும் ஒரு கதையை எங்களுக்கு செய்தியாக தந்துகொண்டிருக்கிறீர்கள். மற்றொருபுறம், இந்த ஒரு வருடத்தில், அ.தி.மு.கவின் அரசியல் கூத்துகளை பொறுக்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்புகளை நாங்கள் உணராமல் இல்லை. 

மூன்று முறை முதல்வராக இருந்த ஒருவரின் அடையாளத்தை எவ்வளவு சீர்குலைக்க முடியுமோ, அவ்வளவு சீர்குலைத்துவிட்டீர்கள். ஜெயலலிதாவின் கம்பீரம் கலந்த ஆளுமையைப் பற்றி தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்குகூட தெரியும். அதே சமயம், தமிழக மக்களான எங்களுக்கு அ.தி.மு.க தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் பற்றியும் தெரியும். நீங்களெல்லாம் ஜெயலலிதா வரும்போது அவரை வணங்க கைகூப்பி, தலை தரையில்பட குனிந்தவர்கள்தானே? அப்படிப்பட்ட நீங்கள், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை உள்பட பல விஷயங்களை 'கொச்சைப்படுத்தியிருக்கும்' அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. கிட்டதட்ட 20 வருடங்களாக, அவருக்கே உரிய  பிரத்யேகமான உடையில் கறாராக, அரிதாக கண்கள் சுருங்க சிரிக்கும் அவரைப் பார்த்த எங்களை... மருத்துவமனையில்  நைட்டி அணிந்துகொண்டு தன்னை வீடியோ எடுக்கிறார்கள் என்பதை உணராதவர் போல், எங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் அவரை பார்க்க மனம் பதைப்பதைக்கிறது. கட்சியிலிருந்து கடைக்கோடி மக்கள் வரை, அவர் காலில் விழுந்து வணங்கிய மக்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டலாம். அப்போதெல்லாம்கூட அவர் அணிந்திருக்கும் காலணி வெளியில் தெரிந்ததில்லை. இப்போது, தன் மருத்துவமனை படுக்கையில், அவரின் இரு கால்களும் பலவீனமாக தெரியும்படி வீடியோவில் பதிவாகியிருப்பது, விவரிக்கமுடியாத ஒரு வெறுமையை எங்களுக்குள் உருவாக்கியிருக்கிறது. 'என் பின்னால் என்ன இருக்கிறது? என்பதை வீடியோவாக எடுங்கள்' என்று அவர் சொன்னதாக நீங்கள் சொல்லும் கதையை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் பின்னால் உள்ளவற்றை எடுக்க ஒற்றை போட்டோ போதுமே... இந்த அடிப்படையான விஷயம்கூட தெரியாதவராக நீங்கள் அவரை இப்போது காட்ட முயல்வது அதைவிடக்கொடுமை.

ஒரு வருடத்துக்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போலோ மருந்துவமனை வாசலில் மணிக்கணக்காகக் காத்திருந்தோம். 'அவர் நலமாக இருக்கிறார். எனினும். அவர் புகைப்படம் வெளிவருவதை அவர் விரும்ப மாட்டார்' என்ற பதிலையே திரும்ப திரும்ப சொல்லி எங்களை ஏமாற்றத்துடன் அனுப்புனீர்கள். இப்போதோ, அவர் மருத்துவமனை படுக்கையில் ஜூஸ் குடிப்பதுபோல வீடியோவை, 'தகுந்த சமயம்' பார்த்து வெளியிட்டுள்ளீர்கள். 

ஒரு சராசரி தமிழகப் பெண்ணாக, என்னால் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒரு முதல்வர் இறந்து ஒரு வருடம் கழித்து, அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை வெளியிடுவதற்கு என்ன காரணம்? அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஆளுநரையே பார்க்க நீங்கள் அனுமதிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அந்தச் சூழ்நிலையில், யார் இந்த வீடியோவைப் படம் பிடித்தனர்? எனக்கு மற்றொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தீர்கள். இப்போது வீடியோ... அடுத்து என்ன? 

ஒ.பி.எஸ் தரப்பினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைக் கொச்சைப்படுத்தி வருவதாகக் கூறினீர்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, நீங்கள் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறீர்கள்? அப்படியானால், ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்து, சசிகலா பற்றின குற்றச்சாட்டுகள் எழுப்பியபோதே, இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? 

எங்களைப் போன்ற மக்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மை என்றும் வெளியில் வராது என்று இந்த ஓராண்டு அரசியல் நிகழ்வுகளே உணர்த்திவிட்டது. இப்போது, எங்களுக்குள் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான். உங்களின் அரசியல் ஆட்டத்தில், ஜெயலலிதா என்ற ஓர் ஆளுமை வாழ்ந்த வரலாற்றுச் சுவடுகள் முழுவதும்  திரிக்கப்பட்ட அத்தியாயங்களாக நிறைந்துவிடுமோ என்பதுதான். 

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஜெயலலிதா எங்களைப் பார்த்து, 'செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?' என்று கேட்டார். இப்போது எங்களுக்குத் தோன்றுவதெல்லாம், என்றாவது உங்களைப் பார்த்து, 'என் இறப்புக்குப் பின்னால், அ.தி.மு.க கட்சியையும் என் பெயரையும் நிலைநாட்டும் வண்ணம் ஏதாவது செய்வீர்களா?' என்று கேட்கத் தவறிவிட்டாரோ என்பதுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!