டெங்கு பாதித்த ஐந்தே நாளில் உயிரிழந்த 4 மாத கைக்குழந்தை!

நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த 4 மாத கைக்குழந்தை, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் டெங்குகுறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு பலி

நெல்லை மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. சுகாதாரக் குழுவினர், மாவட்டம் முழுவதும் நோய் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டடங்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் கொசு முட்டைகள் உருவாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறார். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

இருப்பினும், டெங்கு காய்ச்சலின் தீவிரம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, வடகிழக்குப் பருவமழைக்குப் பின்னர், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. அதனால், நீர் தேங்கிக்கிடக்கும் இடங்களில் கொசு ஒழிப்புக்கான மருந்துகளைத் தெளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 4 மாத கைக்குழந்தைக்கு, கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துவந்துள்ளது. அதனால், 5 தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். ஆனால், டெங்கு காய்ச்சலின் தீவிரம் குறையாததால், வெள்ளை அணுக்களின் அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது.

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், குழந்தை குமரேசன் இன்று அதிகாலை நாகர்கோவில் மருத்துவமனையில் இறந்துள்ளான். இந்தத் தகவல் பணகுடி பகுதியில் பரவியதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல்குறித்த அச்சம் ஏற்பட்டு ள்ளது. அதனால், சாதாரண காய்ச்சல் வந்தவர்கள்கூட அச்சத்துடன் மருத்துவர்களைத் தேடிச்செல்வதால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!