வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (22/12/2017)

கடைசி தொடர்பு:13:20 (22/12/2017)

100 ஆண்டுகளில் முதல் முறையாக ஒத்திவைக்கப்பட உள்ள இந்திய அறிவியல் மாநாடு!

முதல் முறையாக, இந்திய அறிவியல் மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட இருப்பது, அறிவியல் அறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அறிவியல் மாநாடு

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இந்திய அறிவியல் மாநாடு நடப்பது வழக்கம். இந்த மாநாட்டில், இந்தியா முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள், தங்களுடைய ஆராய்ச்சிகுறித்து கருத்தரங்கில் விவாதிப்பார்கள். ஜனவரி முதல் வாரத்தில், 105-வது அறிவியல் மாநாடு ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலையில் நடைபெற இருந்தது. மாநாடு நடக்க 10 நாள்களே உள்ள நிலையில், 'தற்போது ஒஸ்மானியா பல்கலையில் அறிவியல் மாநாடு நடத்துவதற்கான சூழல் இல்லை என பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்திருக்கிறார். இதனால், இந்திய அறிவியல் மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடத்துவதிலிருந்து ஒத்திவைக்கப்பட  உள்ளதாக, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கங்காதர் அறிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், ஒஸ்மானியா பல்கலைக்கழக விடுதியில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து நடந்த தொடர் போராட்டத்தால், பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக இருக்கிறது. இந்தப் போராட்டம், அறிவியல் மாநாட்டுக்கு பிரதமர் வருகை தரும்போது, எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே, மாநாடு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு இருக்கிறது. தற்போது, இந்திய அறிவியல் அறிஞர்கள் 100 ஆண்டுகள் பழைமையான ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மற்றொரு தேதியில் மாநாடு நடத்துவதா அல்லது இதர இடத்தில் நடத்துவதா என்று யோசித்துவருகின்றனர் .