செல்போனுக்காக மாணவன் கொலை! சகமாணவர்களே கொன்ற கொடூரம்

செல்போன் வாங்கியதற்கு பணம் கொடுக்காத பிரச்னையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், வகுப்புத் தோழனையே அடித்துக் கொலை செய்துள்ளனர் இரண்டு மாணவர்கள்.

வேலூர்

``வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த வேப்பங்கால் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் சந்தோஷ் (13). பொய்கை அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதே வகுப்பில் லத்தேரி அடுத்த கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த  குமார் மற்றும் ராஜா (பெயர் மற்றபட்டுள்ளது) இருவரும் படித்துவந்தனர். இவர்கள், சந்தோஷ்க்கு நல்ல நண்பர்கள்.

அதன் அடிப்படையில் சில நாள்களுக்கு முன்பு நண்பன் குமாருக்கு நவீன வசதிகொண்ட செல்போனை சந்தோஷ் விற்றுள்ளான். அதற்கான பணத்தைப் பாதி கொடுத்துவிட்டு மீதி பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளான் குமார். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, தனது ஊருக்கு வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளான் குமார். அதன் அடிப்படையில், கிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு நேற்று முந்தினம் குமார் மற்றும் ராஜாவுடன் சந்தோஷ் சென்றுள்ளான். செல்லும் வழியில் குமாருக்கும் சந்தோஷுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தில் குமாரும் ராஜாவும் சேர்ந்து சந்தோஷின் தலையில் பெரிய கட்டை மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளான்.

இதற்கிடையில், பள்ளிக்குச் சென்ற சந்தோஷ் வீடு திரும்பாதது குறித்து பார்த்திபன் பல இடங்களில் விசாரித்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் நேற்று காலை பள்ளிக்கு சென்ற பார்த்திபன், தன் மகன் சந்தோஷ் வீட்டுக்கு வரவில்லை என ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் வகுப்பு மாணவர்களிடம் விசாரித்தபோது குமார் மற்றும் ராஜா முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கவே இருவரையும் அழைதுக்கொண்டு கிருஷ்ணாபுரத்திற்கு சென்றனர். அப்போது கிருஷ்ணாபுரம் கானாற்றில் வைத்து சந்தோஷைக் கொலை செய்ததாக இருவரும் தெரிவித்துவிட்டு தப்பியுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த லத்தேரி போலீஸார் விரைந்து சென்று சந்தோஷின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பிவைத்தனர். பின்னர், ஒரு மாணவனைப் பிடித்து விசாரித்து வருகிறனர். ஒருவன் தலைமறைவாக உள்ளான். பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!