கடையில் புகுந்து பொருள்களை அள்ளிச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள்! கொந்தளித்த வியாபாரிகள் மறியல்

நெல்லை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள், கடைகளை அடைத்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், பயணிகள் நடமாடக் கூட முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன. கடை வைத்திருப்பவர்கள் முன்பகுதியில் பொதுமக்கள் நடமாடமுடியாத அளவுக்கு பொருள்களை வைத்திருந்தனர். அத்துடன், புதிது புதிதாக கடைகளும் முளைத்ததால் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். 

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், குறிப்பிட்ட சில கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றாமல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகப் புகார் எழுந்தது. அத்துடன், ஆக்கிரமிப்பில் இருந்த பொருள்களை மட்டும் அகற்றாமல் கடையின் உள்ளே நுழைந்து அங்குள்ள பொருள்களையும் அள்ளிச் சென்று மாநகராட்சி வாகனத்தில் ஏற்றியதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.

சாலைமறியல்

இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், தங்கள் கடைகளை அடைத்துவிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வணிகர்களைப் போராடத் தூண்டியதாகக் கடைக்காரர்கள் 2 பேரை போலீஸார் பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் இருந்து வி.எம்.சத்திரம் வரையிலும் உள்ள 7 கி.மீ தூரத்துக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!