வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (22/12/2017)

கடைசி தொடர்பு:16:40 (22/12/2017)

ஆயிரம் பேருடன் திரண்டு சென்ற 5 எம்.எல்.ஏ.க்கள்! அதிர்ந்துபோன கலெக்டர் அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த நவம்பர் 30-ம் தேதி,  ஒகி புயல் கடுமையாகத் தாக்கியது. அதனால், மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 1000 கோடிக்கு மேல் பொருள்கள் சேதமடைந்துள்ளன. பலர் இறந்துள்ளனர். பல ஏக்கர் பாசன நிலங்களில் வயல்கள், ரப்பர், வாழை ,தென்னை ,தோட்டப்பயிர்  மற்றும் நெற்பயிர்கள் அழிந்துவிட்டன.  விவசாயிகள்  முழுமையாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். கால தாமதமாகவே பிரதமர் மோடி வந்தார். கண்துடைப்புக்காக மீனவர்களை மீட்க நடவடிக்க எடுத்துள்ளதாகவும், புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கும், தொழில்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல், பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்துசென்றுள்ளனர்.

இது, மீனவர்களையும் விவசாயிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், காணாமல்போன மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட எம்.எல்.ஏ-க்களான சுரேஷ் ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் விஜயதாரணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள், ‘ ஒகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணமாகத் தலா ரூ.20 லட்சம் உடனே வழங்கி, வீடுகளை இழந்தவர்களுக்கு அதற்குரிய நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும்  என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களுடன் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள், மீனவர்கள் என சுமார் 1,000 பேர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல்செய்துவருகிறார்கள். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க