'எல்லாத் துறை கிட்டேயும் மனு கொடுத்துட்டோம்; அப்போ இப்போன்னு இழுக்கிறாங்க'- மின்சாரத்துக்காக ஏங்கும் பாரதி படிப்பகம் | social activists urges puducherry government to give Electricity connection for Bharati Library

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (22/12/2017)

கடைசி தொடர்பு:17:22 (22/12/2017)

'எல்லாத் துறை கிட்டேயும் மனு கொடுத்துட்டோம்; அப்போ இப்போன்னு இழுக்கிறாங்க'- மின்சாரத்துக்காக ஏங்கும் பாரதி படிப்பகம்

புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதி: மகாகவி பாரதியார் கால்சுவடுகள் பதிந்த இடம். அந்த வீதியில் அவர் வாழ்ந்த வீடு இன்று அருங்காட்சியமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஈஸ்வரன் கோயில் வீதி மற்றும் மகாத்மா காந்தி வீதி சந்திப்பில் உள்ளது ‘பாரதி இலவசப் படிப்பகம்’. அந்தத் தெருவைக் கடந்து செல்லும் யாராலும் அந்தச் சிறிய படிப்பகத்தை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. இலேசாக மழை பெய்து ஓய்ந்திருந்த நண்பகல் பொழுதில் அப்படிப்பகத்தைப் பற்றி அறிந்துகொள்ளச் சென்றிருந்தோம். அந்த இடம் தாழிடப்பட்டு இருந்ததால் அருகில் இருந்த கடைக்காரர்களிடம் விசாரித்தோம். “இதோ! அவங்ககிட்ட கேளுங்க” என்று அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களைக் கைக்காட்டுகிறார்கள். சவாரி இல்லாத ஆட்டோ ஓட்டுநர்கள் நம்மிடம் பேச அமர்ந்தார்கள். 

“கொஞ்சம் இருங்க. மழை நின்னுடுச்சு, இந்த நியூஸ் பேப்பர் ஸ்டாண்ட வெளியில தூக்கி வெச்சுடறேன்” என்றபடி உள்ளே இருந்த செய்தித்தாள் ஸ்டாண்டைத் தூக்கி வெளியே வைத்தார் ஒருவர். இன்னும் கொஞ்சம்பேர் அவர்களோடு சேர்ந்துகொள்ள அந்தப் படிப்பகம் தொடங்கப்பட்டதைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள்.  “இந்த இடம் முன்னாடி காடும், கரம்புமா இருக்கும்ங்க. தேவை இல்லாதவங்க வந்து குடிக்கிறதும் சிகரெட் பிடிக்கிறதுமா இருப்பாங்க. இந்த இடத்த ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. அதனாலதான், கடந்த 2006-ம் வருஷம், இங்க முதல்ல ஒரு சின்ன பிளாஸ்டிக் கூரைபோட்டு இந்த இடத்துல மக்கள் படிக்கிறதுக்குச் செய்தித்தாள்கள் வாங்கிப் போட்டோம். இந்தச் செய்தித்தாள்கள் எல்லாமே எங்களோட சொந்தக்காசுல வாங்கிப்போட்டோம். அதுக்கு அப்புறமா நல்ல மனம் கொண்ட ஒருவர், எங்களுக்கு மாதம் முழுக்க நியூஸ்பேப்பர் வாங்குறதுக்கான செலவை அவர் ஏத்துக்கிட்டார்” என்று பூரிப்போடு கூறினார். நாம் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே சிலர் வந்து செய்தித்தாள்கள் படிப்பதும் செல்வதுமாக இருந்தனர். 

“கொஞ்ச வருஷம் கழிச்சு நாங்க எல்லாருமே எங்களோட சொந்தக்காசைப் போட்டு ஒரு சின்ன கட்டடம் மாதிரி கட்டினோம்ங்க. அதுவரைக்கும் பொதுமக்கள் மட்டுமே வந்துட்டு இருந்த இந்த இடத்துக்கு, பள்ளிக்கூடம் படிக்கிற பிள்ளைகள் எல்லாம் வர ஆரம்பிச்சாங்க. இது பாரதியார் வாழ்ந்த தெரு அப்படிங்கறதால, அவருடைய பெயரையே இந்தப் படிப்பகத்துக்கு வெச்சோம். சின்ன இடமா இருந்தாலும், அவரோட பிறந்த நாள், நினைவு நாள் எல்லாத்தையும் எங்களால முடிஞ்ச வரைக்கும் சிறப்பா கொண்டாடுவோம். நல்ல மனசு கொண்ட நிறைய பேர், அவங்க கிட்ட இருக்கற புத்தகங்கள் எல்லாம் இங்க கொண்டுவந்து கொடுத்தாங்க. எல்லாமே முக்கியமான, தவிர்க்க முடியாத புத்தகங்கள். குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்கள்கூட இருக்கு” என்று கூறியபடி நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்கள். 

முதலில் நம் கண்ணில் பட்டது டால்ஸ்டாயின் போரும் அமைதியும்! வியப்போடு பார்த்த நமக்கு, திருக்குறள் ஆராய்ச்சி உரை, மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் தேர்ந்தெடுத்த உரைகள், லெனினின் சிந்தனைகள் என்று ஆச்சர்யம் ஊட்டியது அந்தப் புத்தக அடுக்கு! 
“ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும்போதும் நிறைய புத்தகங்கள் வீணா போயிடும். மனசே கேட்காம அப்புறப்படுத்துவோம். சாதாரணமான புத்தகங்கள் அப்படின்னா பரவா இல்லை. எல்லாமே பாதுக்கப்பட வேண்டிய புத்தகங்களா இருக்கு” என்றவர்களிடம், மின்சார வசதி எல்லாம் எப்படி என்று கேட்டோம். 

“ரொம்ப நாளாவே நாங்க கரன்ட் கொடுங்க அப்படின்னு கேட்டுட்டே இருக்கோம்ங்க. கலை மற்றும் பண்பாட்டுத்துறை, மின்சாரத்துறைன்னு எல்லாத் துறைகள் கிட்டேயும் நிறைய முறை மனு கொடுத்துட்டோம். நேர்ல போயும் கேட்டுப் பார்த்துட்டோம். நேர்ல பார்க்கும்போது அப்போ இப்போ அப்படின்னு இழுப்பாங்க. ஆனா இதுவரைக்கும் இவ்வளவு வருஷமா கொடுத்த எந்த மனுவுக்கும் எழுத்துரீதியான பதில் எங்களுக்கு வந்ததே இல்ல. ஒருநாள் நாங்க பேப்பர் வைக்கலன்னாலும் அடுத்தநாள் இங்க வந்து கேக்கறவங்க இருக்காங்க. காலையில 8 மணியிலயிருந்து 9 மணி வரைக்கும் அவ்வளவு பேர் இங்க வந்து பேப்பர் படிப்பாங்க. சாயங்காலத்துல ஸ்கூல் பசங்க வருவாங்க. அரசேகூட இதை ஏற்று நடத்தட்டும் அப்படின்னுதான் சொல்றோம். பொதுப்பயன்பாட்டுக்காக இந்த இடம் இருக்குது. அரசு கொஞ்சம் மின்சார வசதி கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும்” என்று கோரிக்கையோடு அவர்களுடைய வேலையைக் கவனிக்கச் சென்றார்கள் அவர்கள்!