வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (22/12/2017)

கடைசி தொடர்பு:15:07 (22/12/2017)

செய்யாத குற்றத்தை நினைத்து உயிரை மாய்த்துக்கொண்ட அரசு பெண் ஊழியர்!

செய்யாத குற்றத்தை நினைத்து மனம் குமைந்த 22 வயதே ஆன கிளை தபால் அலுவலராகப் பணிபுரிந்த பெண் ஒருவர், விஷம் குடித்து இறக்க, அந்தச் சோகம் தாளாமல் அவரது வளர்ப்பு தாயும் சுருண்டுவிழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளை காலனியில் பொன்ராஜ் என்ற போடி என்பவரும், இவரது மனைவி மாணிக்காயியும் வசித்துவந்தனர். கூலிவேலை செய்யும் இவர்களுக்கு, நீண்ட நாள்களாக குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது.  அதனால், முசிறி அருகே உள்ள மாங்கரைப்பேட்டையிலிருந்து, பிறந்த சில நாள்களே ஆன ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து, மாரியம்மாள் என்று பெயர் சூட்டி வளர்த்துவந்துள்ளனர். செல்லமாக மாரியம்மாளை வளர்த்த அவர்கள், கஷ்டப்பட்டு அவரை பொறியியல் படிக்கவைத்துள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்த மாரியம்மாள், கடந்த 6 மாதங்ளுக்கு முன்பு தோகைமலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பை எடுக்கும் பணியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர், துறைரீதியான தேர்வில் தேர்ச்சிபெற்ற மாரியம்மாள், பொருந்தலூர் ஊராட்சி, தெலுங்கபட்டியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் கிளை தபால் அலுவலராக பணியாற்றிவந்தார்.

மிகவும் பின்தங்கி செயல்பட்டுவந்த தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில், சிறப்பாகப் பணியாற்றியதற்காக மாரியம்மாளுக்கு அஞ்சல் துறை சார்பாக ரூ.52 ஆயிரம் ஊக்கத்தொகையும், பாராட்டுப் பத்திரமும் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு, தான் பணியாற்றிவரும் தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கணக்கில் குறைந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை அஞ்சல் அலுவலகத்தில் திருப்பிச் செலுத்தி, அதை சரிசெய்துள்ளார் மாரியம்மாள். இருந்தபோதும், 'சரியாகப் பணியாற்றியும் எப்படி கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்தது' என்று தெரியாமல் மாரியம்மாள் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், மனவேதனை தாங்கமுடியாமல் கடந்த 16 -ம் தேதி, தனது வீட்டில் இருந்த எலி மருந்தை  சாப்பிட்டு மயங்கிவிழுந்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள், மாரியம்மாளை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 20-ம் தேதி மாரியம்மாள் இறந்துவிட்டார். இந்தத் தகவல் அறிந்த மாரியம்மாளின் தாய் மாணிக்காயியும், 'தான் தத்தெடுத்தாலும், தன் மகளாக எண்ணி வளர்த்த செல்ல மகள் இறந்துவிட்டாளே' என்று அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். மகள் இறந்த துக்கம் தாளாமல் தாயும் இறந்துவிட, ஒரே குடும்பத்தில் மகளும், தாயும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, உறவினர் மகாமுனி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.