வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (22/12/2017)

கடைசி தொடர்பு:17:30 (22/12/2017)

ரவிச்சந்திரன் பரோல் கேட்ட வழக்கில் கூடுதல் சிறைத்துறை டிஐஜிக்கு நோட்டீஸ்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், பரோல் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க தமிழக சிறைத்துறைக் கூடுதல் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரன்  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இந்த 25 ஆண்டு சிறையில் 3 முறை பரோல் விடுமுறை வழங்கப்பட்டது. குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பரோல் வழங்க இயலாது என மதுரை சிறைத்துறை துணைத் தலைவர் மறுத்து உத்தரவிட்டுள்ளார். ஆகவே, அந்த உத்தரவை ரத்து செய்து ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா அமர்வு, இது குறித்து கூடுதல் சிறைத்துறை டிஐஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க