முல்லை பெரியாறுக்கு அனுமதிக்காத கேரள வனத்துறை! கலெக்டரிடம் தமிழக விவசாயிகள் புகார் | TN farmers files complaint against Kerala forest department officials

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (22/12/2017)

கடைசி தொடர்பு:17:40 (22/12/2017)

முல்லை பெரியாறுக்கு அனுமதிக்காத கேரள வனத்துறை! கலெக்டரிடம் தமிழக விவசாயிகள் புகார்

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்குப் பெரிதும் உதவுவது முல்லை பெரியாறு அணை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அணையின் மொத்த கொள்ளளவான 152 அடி தண்ணீரைத் தேக்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் கனவு என்றே சொல்லலாம். இதற்கான முயற்சியில் தமிழக அரசு முனைப்பு காட்டியது. அதன் விளைவாக மெயின் அணையின் அருகில் இருக்கும் பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடி தண்ணீரை அணையில் தேக்கிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் அணைக் கண்காணிப்புக் குழுக்கள் அவ்வப்போது அணையை ஆய்வு செய்து வருகிறது. மேலும் துணைக் கண்காணிப்புக்குழுவும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில், அணைப் பாதுகாப்பு தொடர்பாக மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு பிரிவு துணைக் கமாண்டோ ஆய்வுசெய்ய வந்தபோது, கேரள வனத்துறை அவரை அணைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. கேரள வனத்துறையின் இச்செயல், தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் துணைச்செயலாளர் செங்குட்டுவனிடம் பேசியபோது, "முல்லை பெரியார் அணைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு துணைக் கமாண்டோ ஜோக்ராஜு சென்றபோது, அவரை கேரள வனத்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கேரளாவின் இச்செயல், தமிழக பொதுப்பணித்துறையின் பலவீனத்தையே காட்டுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தங்கி வேலை செய்ய வேண்டும் அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்" என்றார். இது தொடர்பாக செங்குட்டுவன் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்தைச் சந்தித்து மனு கொடுத்தனர்.