`இப்ப விழுமோ எப்ப விழுமோ' - போலீஸை அச்சுறுத்தும் கட்டடம்

பாதுகாப்புக் கேட்டு பொதுமக்கள் நாடி வரும் காவல் நிலையத்தின் கட்டடமே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அங்கு பணியாற்றும் காவலர்களும் அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் கிராமத்தில் பொதுமக்களின் தேவைக்காகக் கடந்த 1987-ம் ஆண்டு காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. அப்போது கட்டப்பட்ட காவல் நிலையக் கட்டடமானது தற்போது சேதமடைந்த நிலையில் இப்ப விழுமோ  எப்ப விழுமோ எனும் நிலையில் உள்ளது. எந்த நேரமும்  இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் இங்கு பணியாற்றும் 26 காவலர்களும் அருகில் உள்ள சிறிய கட்டடத்தின் அறைக்குள் தற்காலிகமாகத் தஞ்சம் புகுந்து அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ள காவல் நிலையம்
 

நயினார்கோவில் ஒன்றியத்தில் மட்டும் 37 ஊராட்சிகள் உள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு இந்தக் காவல்நிலையத்தைச் சார்ந்துள்ளனர். இருப்பினும் முழுமையான, முறையான அடிப்படை வசதி ஏதும் இல்லாததால் போலீஸார் இங்கு பணிக்கு வருவதை விரும்பாத நிலை உள்ளது. உயர் அதிகாரிகளின் உத்தரவுக்குப் பயந்து வேறு வழியின்றி இங்கு பணியாற்ற வரும் காவலர்களும் அச்சத்துடனேயே பணியில் உள்ளனர். இயற்கை உடல் உபாதைகளுக்கு அவசரநிலையில் ஆண் போலீஸார் திறந்த வெளிப் பகுதிகளை நாடிச்செல்வதும். பெண் காவலர்களுக்கு அந்த வசதிகூட இல்லாத நிலையில் பணியாற்றி வருகின்றனர். தண்ணீர், கழிப்பறை, ஓய்வு அறை என எந்த வசதியும் இன்றி அவலமான சூழ்நிலையில் பணியாற்றும் நிலையில் உள்ள பெண் காவல் நிலைய ஆய்வாளர் முதல் பெண் காவலர்கள் வரை படும் அவலத்தை சொல்ல முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. எனவே, சிதிலமடைந்து கிடக்கும் இந்த சீர்மிகு காவல் நிலையக் கட்டடத்தை விரைவில் அகற்றி புதிய கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!