வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (22/12/2017)

கடைசி தொடர்பு:20:53 (22/12/2017)

"கணக்குப் பாடத்தை விருப்பமுடன் கற்போம்" தேசிய கணித தினத்தில் மாணவர்கள் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் கணித மன்றம் மற்றும் ரோட்டரி இண்டரக்ட் மாணவர் அமைப்பு சார்பில், கணித மேதை ராமானுஜத்தின் 130 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. இதில், 'கணக்குப் பாடத்தை ஒதுக்க மாட்டேன், பயத்துடன் கற்காமல் விருப்பத்துடன் கற்பேன்' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

National mathematics day conducted in kovilatti

`கணிதமேதை' என அழைக்கப்பட்டும் சீனிவாச ராமானுஜம் கடந்த 1887, டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இன்றி ஆச்சர்யமூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான உண்மைகளைக் கண்டு உணர்ந்தார். 1914 முதல் 1918-ம் ஆண்டு வரை 3,000-க்கும் அதிகமான புதிய கணிதத்தேற்றங்களைக் கண்டறிந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும் செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ்ந்த உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின் தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்ட அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

National mathematics day conducted in kovilpatti nadar school

ஆரியப்பட்டாவுக்குப் பின், 16-ம் நூற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின் தங்கியது. ராமானுஜத்தின் மூலம் 20-ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.  

கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ராமானுஜரின் 125 வது பிறந்த ஆண்டை, `தேசிய கணித ஆண்டா'கவும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 22-ம் தேதியைத் `தேசிய கணித தின'மாகவும் அறிவித்தார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

National mathematics day conducted in kovilpatti nadar school

கோவில்பட்டி, நாடார் நடுநிலைப்பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கணிதமேதை ராமானுஜத்தின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். "கணித பாடத்தை ஒதுக்க மாட்டேன். பயத்துடன் கணக்கு பாடத்தைப் படிக்க மாட்டேன். விருப்பத்துடன் கற்பேன். கணித சூத்திரங்களைப் புரிந்து எளிமையாகக் கணக்குகளைச் செய்வேன். கணக்கு எளிது. கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவேன். கணக்கு பாடத்தைப் பாரமாக நினைக்கும் மாணவர்களுக்கு என்னால் முடிந்தவரை புரிய வைப்பேன்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் ஷார்ட் கட் மெத்தட் முறையில் கணக்குகளைச் செய்து காண்பித்தனர்.

கணித ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கணித புதிர்ப்போட்டி நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க