வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (22/12/2017)

கடைசி தொடர்பு:21:00 (22/12/2017)

மயில்களை விஷம் வைத்துக் கொன்றவர் பற்றி அதிர்ச்சித் தகவல்!

சோளத்தை நாசப்படுத்துகிறது என்பதற்காக நிலத்தின் உரிமையாளர் 9 மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுள்ளார். மயில்களை கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் மயில்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் செல்வராஜ் மற்றும் ரெங்கநாதன் ஆகியோரின் வயல்களில் முத்துச் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 3 ஆண் மயில்கள், 6 பெண்  மயில்கள் என 9 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதைப் பார்த்த இடத்தின் உரிமையாளர் ரெங்கநாதன் என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரகர் கணேசன், வனக் காப்பாளர்கள் சந்திரசேகரன், தனவேல் ஆகியோர் இறந்து கிடந்த மயில்களைக் கைப்பற்றி மயில்களின் இறப்புக்கு காரணம் அறிய, கால்நடை மருத்துவருக்குத் தகவல் கொடுத்தனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் சிலரிடம் பேசினோம். "இம்மாவட்டத்தில் மானாவாரி பயிர்களைத்தான் பயிரிட முடியும். அந்த வகையில் முத்துச் சோளம், கம்பு, வரகு, தினை போன்ற பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிடுகிறார்கள். செல்வராஜ் என்பவர் கடந்த பருவத்தில் இவர் இரண்டு ஏக்கரில் முத்துச் சோளத்தைப் பயிரிட்டிருக்கிறார். அதில் ஆயிரக்கணக்கான மயில்கள் முத்துச் சோளத்தைச் சாப்பிட்டு நாசப்படுத்தியிருக்கிறது. அந்தப் பருவத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததாகப் பலமுறை சொல்லியிருக்கிறார். மயில்களால் பெரும்நஷ்டத்தைச் சந்தித்துவிட்டதாகக் கலெக்டர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காததால் இவர் மருந்து வைத்து கொன்றிருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. மயில் இறந்துவிட்டது என்று கேள்விப்பட்டதும் செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். சோளத்தைச் சாப்பிடுகிறது என்பதற்காகத் தேசிய பறவைக்கு விஷம் வைப்பது சரியா. இதைப் போலீஸார்தான் விசாரித்து உண்மையை வெளியில் சொல்ல வேண்டும்" என்றனர்.

வழக்கை விசாரித்து வரும் வனசரகர் (ரேஞ்சர்) கணேசன் என்பவரிடம் பேசினோம். "முதல்கட்ட விசாரணையில் செல்வராஜ் என்பவரின் காட்டில் முத்துச் சோளம் பயிரிட்டிருக்கிறார். அதை மயில்கள் நாசப்படுத்துகிறது என்ற கோபத்தால் சோளத்தில் மருந்து கலந்து கொன்றிருக்கிறார். மயில்கள் இறந்தைப் பார்த்ததும் பயந்துபோய் செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரைத்தேடிப்  பிடித்து கைது செய்துவிட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த இருக்கிறோம். பிறகு பேசுகிறேன்" என்று முடித்தார்.