வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (22/12/2017)

கடைசி தொடர்பு:22:00 (22/12/2017)

நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்கியது ஏன்?: உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த விஷால்

நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்கியது ஏன் என்பது குறித்து செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். 


நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற விஷால் அணியினர், முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் சங்கத்திலிருந்து அவரை நீக்க மாட்டோம் என்று விஷால் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்க முடிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி, நடிகர் சங்கத்தில் இருந்து தம்மை நீக்கியதாகக் கூறி நடிகர் ராதாரவி, விஷால் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டது. கடந்த 19-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் ஆஜராகவில்லை. 

இந்தநிலையில், ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்கும் முடிவு பொதுக்குழுவில் பெரும்பான்மையான  உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது என்றும் அது தனிப்பட்ட முடிவல்ல என்றும் விஷால் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. விஷாலின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விஷாலுக்கு விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.