வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (22/12/2017)

கடைசி தொடர்பு:22:40 (22/12/2017)

மீனவர்களைத் தேடும் பணியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆண்டோலெனின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "புயலின் போது மாயமான மீனவர்களில் இன்னும் 271 பேரை தேடி வருகிறோம். நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மாயமான மீனவர்களைக் கண்டுபிடித்திடுவோம். மாயமான மீனவர்கள் அனைவரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றதால் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியவில்லை. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நாள்தோறும் ரூ.250 வீதம் வழங்கப்படுகிறது. காணாமல்போன 271 மீனவர்களும் கிறிஸ்துமஸுக்குள் மீட்கப்படுவர். காணாமல் போன மீனவர்களை 25 கப்பல்களில் தேடி வருகிறோம்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க எத்தனை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன? மீனவர்களை தேடும் பணியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 28-ம்  ஒத்திவைத்தது.