''தடாகோயிலில் பாலம் கட்டுவது கஷ்டம்!'' - தம்பிதுரையின் மெத்தன பதில் | Increasing accidents..! MP negligence

வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (22/12/2017)

கடைசி தொடர்பு:21:34 (22/12/2017)

''தடாகோயிலில் பாலம் கட்டுவது கஷ்டம்!'' - தம்பிதுரையின் மெத்தன பதில்

           

 தடாகோயில்

“இங்கு நடக்கும் விபத்துகளில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியானா, இந்தத் தொகுதி எம்.பி-யான தம்பிதுரை இங்கே மேம்பாலம் கட்ட மெனக்கெடுவார்? பதினைந்து வருஷமா நூத்துக்கணக்கான விபத்துகள் நடந்து, ஐம்பதுக்கும் மேற்பட்டவங்க ஸ்பாட்டிலேயே இறந்துபோயிருக்காங்க. எங்க மரண ஓலங்கள் உங்க யார் காதுகளிலும் விழவில்லையா" என்று கண்ணீரோடு கதறுகிறார்கள் அரவக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள்.


 தடாகோயில்

ஆம், கன்னியாகுமரி டு காஷ்மீர் சாலையில்... கரூரிலிருந்து வரும் வாகனங்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, பழனிக்கு, தடாகோயில் அருகே பிரிந்து வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். அந்த இடத்தில், மேம்பாலம் இல்லாததால், திரும்பும் வாகனங்கள்மீது எதிர்வரும் வாகனங்கள் கண் இமைக்கும் நொடியில் மோதிவிட்டுச் சென்றுவிடுகின்றன. இதனால், உயிர்ச்சேதம் ஏற்படுவதாகப் புலம்புகிறார்கள், அப்பகுதி மக்கள்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் 25,000-க்கும் மேற்பட்ட மக்களும், பள்ளப்பட்டி பேரூராட்சியில் 50,000-க்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கிறார்கள். அரவக்குறிச்சி ஒன்றியம் கால்நடை வளர்ப்புக்கும், முருங்கைக்காய் உற்பத்திக்கும் பிரசித்திபெற்றது. அவற்றை, வெளிமாவட்டச் சந்தைகளுக்கு ஏற்றிச்செல்ல இந்த வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட மக்கள் பழனிக்குச் சாமி தரிசனம் செய்ய இந்த வழியில்தான் செல்கிறார்கள். அதோடு, கரூர் சென்று பள்ளி, கல்லூரி படிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வாகனங்களில் இந்த வழியாகத்தான் போய்வர வேண்டியுள்ளது. அதனால், “முக்கியமான இந்தப் பிரிவுச் சாலையில் மேம்பாலம் கட்டி, சர்வீஸ் சாலைகள் அமைத்தால் விபத்துகள் தடுக்கப்படும். இல்லையென்றால், தினம்தினம் விபத்து கண்ட பயத்திலேயே இந்தச் சாலையை நாங்கள் கடக்க நேரிடும்" என்று மக்கள் பத்து வருடங்களுக்கு மேலாகக் கோரிக்கைவைத்து வருகிறார்கள். “கரூர் தொகுதி எம்.பி-யும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், பலன் பூஜ்ஜியம்'' என்கின்றனர் அவர்கள்.

 

தடாகோயில்

இதுகுறித்து, ம.தி.மு.க அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கலையரசன், “கன்னியாகுமரி டு காஷ்மீர் சாலை, வாஜ்பாய் காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதே,கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளுக்கும், பழனிக்கும் செல்லும் வழியில் உள்ள தடாகோயிலில் பிரியும் இடத்தில் மேம்பாலம் கட்டி, சர்வீஸ் (அணுகுச் சாலைகள்) சாலைகள் அமைத்துக்கொடுங்கள் என்று பலமுறை சொல்லிப் பார்த்தோம். ஆனால், இதுவரை அமைக்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு... இந்தத் தடாகோயில் பிரிவுச் சாலையில், தனது மகளோடு சென்று பத்தாவது பாஸ் ஆன டி.சி-யை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக வந்த ஒருவர், வாகனத்தில் அடிபட்டு மகளோடு இறந்துபோனார். அதன்பிறகு, தொடர்ச்சியாக இந்த இடத்தில் விபத்துகள் நடக்க ஆரம்பித்தன. அதனால், 2014-ம் வருடம் எல்லாக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களைத் திரட்டி... இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஒருவார காலத்துக்குப் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அந்தச் சமயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெயந்தி மற்றும் அரவக்குறிச்சி டி.எஸ்.பி பாலசுப்ரமணியன்,தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எனப் பலரும் அங்கு வந்தனர்.

எங்கள் பிரச்னைகளைக் கேட்ட கலெக்டர் ஜெயந்தி, பிறகு தடாகோயில் அருகே மேம்பாலம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, அதிகாரிகளை வைத்து ஆய்வு நடத்தினார். பின்னர், அதனடிப்படையில் 5 கோடி ரூபாய்க்கு மேம்பாலம் கட்ட எஸ்டிமேட் போட்டு, மேலிடத்துக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு, மேம்பாலம் கட்டுவதற்காக வரைபடமெல்லாம் தயார் செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் ஜெயந்தி டிரான்ஸ்ஃபர் ஆகிவிட்டார். இதனால் அந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது" என்றார் சோகமாக.

அடுத்து பேசிய, பள்ளப்பட்டியைச் சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் முன்னாள் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளரான ஆறுமுகம், “கரூரிலிருந்து கன்னியாகுமரி நோக்கிப் போகும் திசையில் தடாகோயில் அருகே எந்தத் தடையும் இல்லை. அரவக்குறிச்சி பிரிவுச் சாலையில் பிரியும் வாகனங்கள் திரும்பும்போது... கண் இமைக்கும் நேரத்தில் பின்னேவரும் வாகனங்கள் திரும்பும் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திவிடுகின்றன. கரூரை நோக்கிச் செல்லும் இடதுபுறச் சாலையில் மட்டும் இரண்டே இரண்டு பேரிகார்டுகளை வைத்துள்ளார்கள். அதைக்கூடப் பார்க்காத வாகன ஓட்டிகள் அந்தப் பேரிகார்டையும் உடைத்து எறிந்துவிட்டு, திரும்பும் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். டூவீலர்களில் செல்வோர்களைக் கடுமையாக மோதி, கோர விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட கோர விபத்துகள் இங்கே நடந்து, 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். 'இங்கே மேம்பாலம் கட்டித் தாங்க'னு எங்கள் தொகுதி எம்.பி-யான தம்பிதுரையிடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம். அவரும், 'பண்ணித் தர்றேன்' என்றார். ஆனால்,செய்யவில்லை.

கடந்த எம்.பி தேர்தலில், அவர் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொல்லித்தான் இங்கே ஜெயித்தார். ஆனால், ஜெயித்த பிறகு, ‘இந்தத் தேசிய நெடுஞ்சாலை வந்தபோதே நீங்க மேம்பால கோரிக்கையை வெச்சிருக்கணும். ஆனா, இப்போ கஷ்டம்'னு சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால், வேலாயுதபாளையத்துக்கு முன்பு இதே நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மத்திய அரசிடம் பேசி, தங்கள் கல்லூரி முன்பு மேம்பாலம், அணுகுச்சாலை அமைத்திருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு மக்கள் புழங்கக்கூடிய தடாகோயில் அருகே மேம்பாலம் கட்டுவதற்கு தம்பிதுரை, அலட்சியமான பதிலைச் சொல்கிறார். அ.தி.மு.க. உடைந்தபோது எதற்காகவோ எல்லாம் டெல்லி போய், பிரதமரை எளிதாகப் பார்த்து காரியம் சாதித்த அவரால், பல உயிர்களைப் பலிவாங்கும் இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட முயற்சி எடுக்கவில்லை. இன்னும் எத்தனை உயிர்கள் இங்கே போனால், தம்பிதுரை இதற்காகத் துரிதமாகச் செயல்படுவார் என்று தெரியவில்லை. நாங்களே தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளைப் பார்த்து கோரிக்கைவைத்தோம். ஒன்றும் நடக்கவில்லை. எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவாவது நாங்கள் இங்கு மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி மறுபடியும் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கவிருக்கிறோம்" என்றார்.

இதுதொடர்பாகத் தம்பிதுரை தரப்பினரிடம் பேசினோம். “அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அண்ணன் (தம்பிதுரை) சொன்னது வாஸ்தவம்தான். அதற்காக அவர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்" என்றனர்.

 தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், “இதற்காக, ஜெயந்தி மேடம் கலெக்டராக இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அவர் போட்டுக்கொடுத்த எஸ்டிமேட்டில் இப்போது பாலம் கட்ட முடியாது. அதனால்தான் அது கிடப்பில் இருக்கிறது. தேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் இது” என்றனர்.

விபத்துகளைத் தடுக்க விரைந்து பாலம் கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close