வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (23/12/2017)

கடைசி தொடர்பு:17:26 (21/06/2018)

117 ஆண்டுகளாக கிறிஸ்தவம் சுமக்கும் ராமநாதபுரம் கப்பல் தேவாலயம்! #Christmas

ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் கப்பல் போன்ற வடிவில் 117 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது தேவாலயம் ஒன்று. ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர் இறைப்பணிக்காக இந்தியாவுக்குக் கப்பலில் வந்ததன் நினைவாக இங்குள்ள  புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருக்கிறது இந்த தேவாலயம்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுருவிடம் பேசினோம்... “கிறித்துவ மதத்தை உலகெங்கும் பரப்ப, கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த பல இறைப்பணி சபைகள் இருந்தன. போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், டேனியர் காலத்தில் இந்தியாவுக்கு அதிகளவில் வந்த இந்தச் சபையினர்  பல இடங்களில் தேவாலயங்களைக் கட்டியிருக்கிறார்கள். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் உள்ள தேவாலயம்,  எஸ்.பி.ஜி சபையினரால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

இங்கிலாந்தில் வாம்ஸ்வொர்த் என்ற இடத்தில் கி.பி.1862 -ம் ஆண்டில் பிறந்த ஆர்தர் ஹீபர் தாமஸ், எஸ்.பி.ஜி. (S.P.G - Society for the Propagation of the Gospel) சபையின் கிறித்துவ மத ஊழியத்துக்காக, `எஸ்.எஸ்.மனோரா’ என்ற நீராவிக் கப்பலில் 2.5.1887 அன்று சென்னை வந்தார். சில வாரங்கள் சென்னையில் தங்கியிருந்த பின்னர் அவர் ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டார். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.

ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாக கட்டப்பட்ட தேவாலயம்

சென்னையில் ரெல்டன் என்பவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அவர், ராமநாதபுரத்திலும் தொடர்ந்து தமிழ் பயின்று வந்தார். அவர் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களில், தான் கற்றுக்கொண்ட தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 பிப்ரவரியில் 110 முதல் 115 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் இருந்ததாகவும், புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததாகவும், சாயல்குடி பகுதிகளில் அதிகளவு மான்களைப் பார்த்ததாகவும் பதிவுசெய்திருக்கிறார். அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி மற்றும் அவர் சகோதரர் தினகர் சேதுபதி ஆகியோருடன் நல்ல நட்புக்கொண்டிருந்தார். இவர் தனது 28-வது வயதில் 2.11.1890 அன்று மலேரியா காய்ச்சலால் ராமநாதபுரத்தில் காலமானார்.  உத்தரகோசமங்கை அருகே வெண்குளத்தில் இவர் பெயரில் ஒரு சர்ச் கட்டப்பட்டிருக்கிறது. `மிகச் சிறந்த மிஷனரி ஊழியர்’ என இவரை கால்டுவெல் புகழ்ந்திருக்கிறார்.

3 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து மரணமடைந்த ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாக 500 பவுண்டு செலவில் ராமநாதபுரத்தில் தேவாலயம் கட்ட இங்கிலாந்தில் இருந்த அவர் நண்பர்கள் முடிவுசெய்தனர். அவர் இந்தியாவுக்கு கப்பல் பயணம் மேற்கொண்டதன் 12-ம் ஆண்டில் இந்த தேவாலயம் உருவாக்கப்பட்டதால், அது ஒரு சிறிய கப்பல் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.  இந்த ஆலயம் 28.03.1900 அன்று வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

கப்பல் வடிவம் கொண்ட தேவாலயம் தற்போதைய நிலை

130 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தையும் மழையையும் தாங்கும்விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதைக் கட்டுவதற்கு, கடல் சிப்பிகளில் இருந்து பெறப்பட்ட சுண்ணாம்பு மற்றும் இந்தப் பகுதியிலேயே தயாரிக்கப்பட்ட செங்கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. கல், தேக்குமரம், ஓடுகள் ஆகியவை  அதிக விலை கொடுத்து வெளியில் இருந்து வாங்கப்பட்டன. காரை அரைக்கும் செக்குகள் மூலம் சுண்ணாம்பு சாந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. தரையிலும் சுவரிலும் சுண்ணாம்புப் பூச்சு பூசி, பின்னர் சோப்புக்கற்களைக் கொண்டு  பளிங்குபோல் மெருகேற்றியிருக்கிறார்கள்.

இதன் வெளிப்புற குவிந்த கூரை அமைப்பும் சுண்ணாம்புப் பூச்சும் உள்ளே குளிர்ச்சியாக இருக்கச்செய்கிறது. மேற்கூரையில் உள்ள ஜன்னல்கள் உள்ளே போதுமான வெளிச்சம் கிடைக்கச் செய்கின்றன. பலிபீடத்தின் முன்பகுதியின் மேற்கூரை, உயரமாக செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. முழுவதும் இந்தியப் பொருள்களைக் கொண்டே இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. பலிபீடத்தில் உள்ள சிலுவை முதலியவை மதுரையில் செய்யப்பட்டுள்ளன. இதன் மணி லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதை போக்சன் என்ற ஆங்கிலேயர் மேற்பார்வையில் உள்ளூர் தொழிலாளர்கள் கட்டியிருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகள் கடந்தும் தாமஸ் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கப்பல் வடிவத்திலான தேவாலயம், பிராட்டஸ்டன்ட் கிறித்துவத்தின் பாரம்பர்யம் மற்றும் ஆங்கிலேயர் கால நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது'' என்றார் ராஜகுரு.