மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த கிராம இளைஞர்கள்..! | Youngsters caught the sand mafia team in Ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (22/12/2017)

கடைசி தொடர்பு:23:40 (22/12/2017)

மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த கிராம இளைஞர்கள்..!

பரமக்குடி அருகே இலவசக் கழிப்பறை கட்ட மணல் எடுப்பதாகச் சொல்லி மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கிராம இளைஞர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பரமக்குடி அருகே மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள்

பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட  பார்த்திபனூர் அருகே வழிமறிச்சான் கிராமப் பகுதியில் உள்ள ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக வந்த தகவலை அடுத்து அக்கிராம இளைஞர்கள் ஆற்றுப் பகுதிக்குச் சென்று மணல் எடுப்பவர்களைச் சுற்றி வளைத்தனர். இந்நிலையில் தகவலறிந்த பார்த்திபனூர் போலீஸாரும் அங்கு வந்தனர்.

அவர்களிடம் மணல் அள்ளிய கும்பலைச் சேர்ந்தவர்கள் ''இலவசக் கழிப்பறை கட்டும் திட்டத்திற்காக 101 வண்டி மணல் எடுக்க அதிகாரிகள் அனுமதி அளித்திருப்பதாக'' கூறியுள்ளனர். போலீஸார் அதற்கான அனுமதியை வாங்கி ஆய்வு செய்த போது அந்த அனுமதி போலியானது எனத் தெரியவந்தது. 

இதையடுத்து ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்கள் மற்றும் ஒரு மணல் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பார்த்திபனூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து பார்த்திபனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் திருட்டைத் தடுத்த கிராம இளைஞர்களின் துணிச்சலையும், நேர்மையாகச் செயல்பட்ட போலீஸாரையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.