மதுபோதையுடன் வாகனம் ஓட்டுபவர்கள் எவ்வளவு தெரியுமா ? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் | Do you know How many people were drunk and drive?

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (23/12/2017)

கடைசி தொடர்பு:00:00 (23/12/2017)

மதுபோதையுடன் வாகனம் ஓட்டுபவர்கள் எவ்வளவு தெரியுமா ? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

சாலையில் வாகனம் ஒட்டுபவர்கள் சுயநினைவுடன் இல்லையென்றால் எவ்வளவு பெரிய பேராபத்துகள் நிகழும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. மது அருந்திவிட்டு போதையுடன் வாகனம் ஒட்டுபவர்களால் நிகழக்கூடிய விபத்துகள் ஏராளம். இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாகனம் ஓட்டும் குடிமகன்களால், சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. ஒரு சிலர் மட்டும் மதுபோதையுடன் வாகனம் ஒட்டுகிறார்கள் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் யதார்த்த உண்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுபோல் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக, 23 ஆயிரம் பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது இந்த ஆண்டுக்கான எண்ணிக்கை. இது அனைவரையும் கவலை அடைய செய்யக்கூடியதாக உள்ளது. 432 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனைத் தவிர்க்க காவல்துறையினரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் தீவிர நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வாகன ஓட்டிகளிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார். தஞ்சை மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் 23 ஆயிரம் பேர். காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ளாதவர்கள் ஏராளம்.