டீசல் இல்லாமல் பாதி வழியில் நின்ற அரசுப் பேருந்து; பரிதவித்த பயணிகள் | Government bus stopped midway without diesel

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (23/12/2017)

கடைசி தொடர்பு:01:00 (23/12/2017)

டீசல் இல்லாமல் பாதி வழியில் நின்ற அரசுப் பேருந்து; பரிதவித்த பயணிகள்

கோவையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து டீசல் தீர்ந்து போனதால் பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்தில் பயணித்தனர்.

கோவையிலிருந்து நேற்று இரவு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டது. இரவு நேரப் பேருந்து என்பதால் பேருந்தில் முழு அளவுப் பயணிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை இந்தப் பேருந்து ராமநாதபுரத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ராமேஸ்வரத்தை நோக்கிச் சென்றது.

டீசல் இல்லாமல் பாதி வழியில் நின்ற அரசு பேரூந்து

ராமேஸ்வரத்திற்கு 30 கி.மீ முன்னதாக வந்துகொண்டிருந்த இந்தப் பேருந்து திடீரென நின்றுபோனது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநரிடம் பேருந்து நின்றது குறித்து கேட்டதற்கு, 'பஸ்ஸில் டீசல் காலியாகிவிட்டது. வேறு பேருந்தில் ஏற்றிவிடுகிறோம்'' எனச் சொல்லி பயணிகளை இறங்கக் கூறியுள்ளனர். சுமைகளுடன் பேருந்தை விட்டு இறங்கிய பயணிகள் ''தொலைதூரத்திலிருந்து கிளம்பும் போதே டீசல் இருக்கா எனப் பார்த்துவிட்டு பேருந்தை எடுத்திருக்க வேண்டாமா'' எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த பேருந்து ஓட்டுநரோ, ''குறிப்பிட்ட அளவு டீசலை கொண்டுதான் பேருந்தை இயக்குமாறு அதிகாரிகள் சொல்கிறார்கள். இதனால் குறைந்த அளவே டீசல் போட்டு விடுகிறார்கள். இடையில் பேருந்து நின்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். இதுபோல பல முறை டீசல் இல்லாமல் பாதியில் நின்றிருக்கிறோம்'' என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாத பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.