வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (23/12/2017)

கடைசி தொடர்பு:01:30 (23/12/2017)

மாணவர்களின் நலனுக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் இரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

ஒப்பந்தம் கையெழுத்து

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பாக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தாகி இருக்கிறது. கல்வியை முடித்துவிட்டு வேலை தேடிச் செல்லும் மாணவர்களுக்கு அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் நேர்காணலிலும் சிறப்பாகப் பங்களிப்பை வெளிப்படுத்த ஆங்கில மொழியின் புலமை அவசியமானது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பின்தங்கிய குடும்பச் சூழலில் உள்ள மாணவர்களைக் கொண்டதாக இந்தப் பல்கலைக் கழகம் உள்ளது. இந்தச் சூழலில் உள்ள மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்த பல்கலைக்கழகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேசப் பங்குதாரராக உள்ள சென்னையைச் சேர்ந்த அரிமா எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனமானது, கடந்த 10 வருடங்களாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பங்குதாரராக இருந்து பல்வேறு முக்கியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவ சமுதாயத்துக்கு ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவ சமுதாயத்தினர் போட்டித் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் சூழல் உருவாகும். 

கையெழுத்தான ஒப்பந்தங்கள்

இதையடுத்து அரிமா எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான வீணா சுதாகருடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர், பதிவாளர் கோவிந்தராஜூ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் காரணமாக மாணவ சமுதாயத்தினர் அச்சமின்றி போட்டித் தேர்வுகளிலும் நேர்முகத் தேர்வுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

அத்துடன், நெல்லையைச் சேர்ந்த பிட்ஸ்டெப் ட்ரெயினிங் அகாடெமி அமைப்புடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மாணவர்களைப் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்யக்கூடிய இந்த நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக அந்த அமைப்பின் பயிற்சியாளர்கள் மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த இரு ஒப்பந்தங்களும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு உதவிகரமாக அமையும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.