இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் ஆறுதல்..!

ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய டி.டி.வி.தினகரன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பெரியபாண்டியன் குடும்பத்தினர்

சென்னை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தான் கொள்ளையரைப் பிடிக்கச் சென்ற தனிப்படையில் இடம்பெற்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டரான பெரியபாண்டியன் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டி.டி.வி.தினகரன் இன்று தனது ஆதரவாளர்களுடன், பெரியபாண்டியனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு வந்தார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் அவரது மனைவி பானுரேகா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வீட்டில் இருந்த பெரியபாண்டியனின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். உயிரிழந்த பெரியபாண்டியனின் மகன்களின் கல்வி விவரம் மற்றும் அவர்களுக்கு உடனடியாக உதவி எதுவும் தேவையா? என்பதை குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

டி.டி.வி தினகரன் ஆறுதல்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ’’கொடூரமான குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு போலீஸ் படையினர் செல்லும்போது கூடுதல் எண்ணிக்கையில் அனுப்பவேண்டும். அப்படிச் செய்திருந்தால் நேர்மையும் துணிச்சலும் மிகுந்த பெரியபாண்டியனை இழந்திருக்க மாட்டோம். அதனால் இனியாவது தமிழக அரசும் காவல்துறையும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வெண்டும்.

பெரியபாண்டியன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நீடிக்கின்றன. காவல்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதில் காவல்துறை அதிகாரிகள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு உண்மையை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி அதிகாரிகள் செயல்படுவார்கள் என நம்புகிறேன். பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்தபடி நிவாரண உதவியைக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். இந்த இடத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை’’ என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!