நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா எப்போது ஆஜராகிறார்?

ஜெயலலிதா மரணம் - விசாரணை ஆணையம்

ரணித்த பின்னும் மறையவில்லை சர்ச்சை’ என்னும் கூற்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவர்களாக இருப்பவர்கள், மரணம் அடைய நேரிடும்போது அவர்களின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடிப்பது வாடிக்கைதான் என்றாலும், ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அத்தகைய சர்ச்சை சற்று அதிகமாகவே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவுடன் ஏறக்குறைய 32 ஆண்டுகள் இருந்த அவரின் தோழி சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர், ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையில் தொடர்ந்து சிக்கிய வண்ணம் உள்ளனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சர்ச்சையின் ஒருபகுதியாக, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதுபோன்ற வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறி, பின்னர் முதல்வர் எடப்பாடி அணியுடன் இணைந்து, சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டியதும், தமிழக அரசால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன். இந்த ஆணையம் முறைப்படி செயல்படத் தொடங்கி, நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்று தன் விசாரணையைத் தொடங்கி மேற்கொண்டுள்ளார்.

சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை அளித்து வருகின்றனர். அனைவரின் வாக்குமூலங்களும், பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோபரபரப்பான இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதா மறைவால் வெற்றிடமான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், அதாவது டிசம்பர் 20-ம் தேதி அன்று, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை வெளியிட்டார் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல். 

இந்த வீடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் வெற்றிவேல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தில் வீடியோவைச் சமர்ப்பிக்காமல் பொதுவெளியில் வெளியிட்டிருப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு, இதுவரை ஆஜரானவர்களில் தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அரசு ஆலோசகராக இருந்தவருமான ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் ஆகியோர்தான் மிக அதிகளவு நேரம் சாட்சியம் அளித்துள்ளனர் என்று தெரிய வருகிறது. அதாவது இவர்கள் இருவரும் நான்குமணி நேரம்வரை, நீதிபதி முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளனர்.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களும், அவருடன் இருந்த சசிகலாவுக்கும், முன்னாள் தலைமைச் செயலாளர்களான ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகனராவ் ஆகியோருக்கும்தான் ஜெயலலிதாவின் உண்மையான உடல்நலம் பற்றித் தெரிந்திருக்கும் என்ற அடிப்படையில், முன்னாள் தலைமைச் செயலாளர்களிடம் மிக அதிக நேரம் விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தவிர, ஏற்கெனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரின் கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் அக்குபஞ்சர் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்த டாக்டர் பாலாஜி, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் நிர்மலா, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் நாராயண பாபு,தி.மு.க. நிர்வாகி டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தகவல்களை பதிவு செய்துள்ளனர். ஜெ. தீபாவின் கணவர் மாதவன், இரண்டு முறை விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி சில விவரங்களை மனுவாக எழுதி கொடுத்திருக்கிறார். சாட்சியங்கள் அளித்த அனைவரின் வாக்குமூலம் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் அனைத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், வீடியோவாகவும் எடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் மனுக்களை அளித்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று கோரி, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவர்கள் தங்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளனர்.

மேலும், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி மற்றும் சசிகலா ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் தொடர்பாக அடுத்த 10 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதாஇதற்கிடையே, விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன்  முடிவடைகிறது. எனவே, கால நீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான உத்தரவு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகளை எந்தத் தேதியில் ஆஜராக சம்மன் அனுப்பலாம் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோதும், அவரின் மரணத்திற்குப் பிறகும் வெளியிடப்படாத வீடியோ காட்சிகள் திடீரென்று வெளியானது ஏன்? தினகரனிடம் இருந்ததாகக் கூறப்படும் அந்த வீடியோவை அவரின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிடுவதற்கு அனுமதி அளித்தது யார்? தினகரனுக்கும், இளவரசி மகள் கிருஷ்ணப் பிரியா குடும்பத்திற்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் உண்மையானவையா என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விசாரணை ஆணையம், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும் அறிக்கையில் விடைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!