"கட்டணமில்லாத கழிப்பறையில் இப்போது சாவியில்லாத பூட்டு போட்டிருக்கு!" - புலம்பும் மாணவர்கள்!

   

"பள்ளி மாணவ, மாணவிகளுக்கு என்றே பிரத்யேகமாக குளித்தலை பேருந்துநிலையத்துல கட்டணமில்லாத இலவச கழிப்பறை அமைத்திருக்கின்றனர். ஆனால், கொஞ்ச காலம்தான் அது பயன்பாட்டுல இருந்தது. அப்புறம், ரெண்டுலயும் பெரிய திண்டுக்கல் பூட்டா போட்டு நிரந்தரமா பூட்டி போட்டுட்டாங்க. இதனால், நாங்க அவசரத்துக்கு ஒதுங்க முடியாம அல்லாடுறோம்" என்று ஆதங்கப்படுகிறார்கள் குளித்தலை பகுதி மாணவர்கள்.

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. இந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் குளித்தலையில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள். பேருந்துகள் மூலமாகத்தான் வந்து போகிறார்கள். அப்படி, பேருந்துகளுக்காக குளித்தலை பேருந்து நிலையத்தில்தான் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல். அப்போது, மாணவர்கள் மட்டும் ஒதுங்குவதற்கு ஏதுவாக குளித்தலை நகராட்சியால் அமைக்கப்பட்ட கழிவறையைத்தான் நகராட்சி நிர்வாகம் பூட்டி வைத்து ஆட்டம் காட்டுவதாக மாணவர்கள் புகார் புராணம் பாடுகிறார்கள். 

இதுபற்றி,நம்மிடம் பேசிய அந்த பகுதி மாணவர்கள் சிலர், "தினமும் குளித்தலை பேருந்துநிலையத்திற்கு சிலநூறு மாணவர்கள் வந்துபோகிறோம். குளித்தலை பேருந்துநிலையத்தில் டாய்லெட் வசதியே கிடையாது. இதனால், சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துகிட்ட கழிவறை அமைச்சு தாங்கன்னு கோரிக்கை வச்சோம். அதைதொடர்ந்தே, இந்த கழிவறையை அமைச்சாங்க. ஆனா, இரண்டு மாதங்கள்லேயே அதை சரியா பராமரிக்காம, பூட்டு போட்டு பூட்டிட்டாங்க. அதனால், நாங்க அவசரத்துக்கு ஒதுங்க இடம் இல்லாம அல்லாடுறோம். நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவறையை திறந்து, சுத்தப்படுத்தி மாணவர்களின் பயன்பாட்டுக்கு விடனும்" என்றார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!