இனயத்துக்கு பதில் கோவளத்தில் துறைமுகமா? - எதிர்க்கத் தயாராகும் மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இனயம் துறைமுக திட்டம் . இந்தத் துறைமுகம் அமைந்தால் மீனவர்களுக்கு மீன் பிடி தொழில் பாதிக்கும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் மீனவர்கள்  மிகப்பெரிய அளவு போராட்டங்களை நடத்தி வந்தார்கள். தொடர் எதிர்ப்பை தொடர்ந்து இனயத்துக்கு பதிலாக கன்னியாகுமரி கோவளம் முதல் மணக்குடி வரை உள்ள இடங்களையும், லீ புரம் முதல் வட்டக்கோட்டை வரையிலான இடங்களையும் ஆய்வு செய்யும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இது தவிர கோவளத்தில் துறைமுகம் அமைக்கப்படுவதற்கான மாதிரி வரைபடமும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

அதில் கோவளம் முதல் மணக்குடி வரை உள்ள அரபிக்கடல் பகுதி இயற்கையாகவே ஆழமான பகுதியாக காணப்படுகிறது என்பதால் துறைமுகம் அமைக்க ஏற்ற இடம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுபோல கன்னியாகுமரி அருகில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் நான்குவழிச் சாலை உள்ளதால் அங்கிருந்து ரயில், சாலை பாதைகளை எடுக்க வசதியாக இருக்கும் என்பதால் கோவளம் பகுதி தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். இதனை தொடர்ந்து கோவளம் துறைமுக திட்டத்துக்கு முதல் கட்டமாக 6 ஆயிரத்து 915 கோடி செலவிலும், 2 வது கட்டமாக 5 ஆயிரத்து 599 கோடி செலவிலும், மூன்றாவது கட்டமாக 7 ஆயிரத்து 368 கோடி செலவில் பணிகள் நடைபெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவளத்தை அடுத்த தெட்சணத்து துவாரகபதியில் ரகசியமாக கடந்த சில நாள்களுக்கு முன் பூமி பூஜை நடந்தது. தகவல் தெரிந்ததும் இப்பகுதி மக்கள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவளம் பகுதியில் கொண்டு வரப்பட இருப்பது சரக்குப் பெட்டக மாற்று முனையம். அது அமைந்தால் கன்னியாகுமரி பகுதியில் 100 வழிவிசை படகுகள், 300 விசைப்படகுகள். ஆயிரக்கணக்கான வள்ளங்களும். கட்டுமரங்களைக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் மற்றும் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். அதனால் துறைமுகம் அமைக்கப்பட எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது எனவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர மக்களை விரட்டுவதற்காக திட்டங்களே கொண்டு வரக் கூடாது என எப்போதுதான் அரசுகள் உணரப் போகிறதோ? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!