வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (23/12/2017)

கடைசி தொடர்பு:06:11 (28/12/2017)

பெரியபாண்டியன் ‘நண்பன்’ முனிசேகரின் ‘சாமி’, ‘மின்னல்’ அடைமொழிகள்!

 

இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இழந்த சோகத்தில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னைக் கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த 8-ம் தேதி மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் குருமூர்த்தி, எம்புரோஸ், சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்த்ரன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளையன் நாதுராம் தன்னுடைய கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாகத் தகவல் தனிப்படை போலீஸாருக்குக் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் போலீஸார் சென்றனர். அப்போது, நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்தார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெய்த்ரன் போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பெரியபாண்டியனின் உடலைத் துளைத்த குண்டு, முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்ததாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது, தமிழக போலீஸாருக்கும் பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானிலிருந்து சென்னை திரும்பிய தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார், ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். அவர்கள் ராஜஸ்தானில் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் யாருடைய போன் அழைப்பையும் எடுப்பதில்லை. வாட்ஸ்அப்பில் பேசக்கூட அவர்கள் தயங்குகின்றனர். இதனால் முனிசேகருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லிவருகின்றனர். அவர்களிடம்கூட முனிசேகர் ராஜஸ்தான் சம்பவம் குறித்து பட்டும்படாமல் பேசுகிறார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்னைக்குத் திரும்பினாலும் கொளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு டூயூட்டிக்கு வரவில்லை. அதுபோல மற்றவர்களும் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையத்துக்குச் செல்லவில்லை.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்

இந்தச் சூழ்நிலையில், இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியனும் முனிசேகரும் நண்பர்கள் என்ற தகவலை அவர்களுக்கு நெருக்கமான 2000-ம் ஆண்டு பேட்ஜ் சப்-இன்ஸ்பெக்டர்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். தற்போது அவர்கள் தமிழகக் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் பேசினோம். "இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனும், முனிசேகரும் கடந்த 2000ம் ஆண்டில்தான் தமிழகக் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணிக்குச் சேர்ந்தனர். ஒரே பேட்ச் என்பதால் பயிற்சிக்காலத்தின்போதே இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துணிச்சல்காரர். அதே நேரத்தில் அமைதியானவர். தேவையில்லாமல் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஆனால், முனிசேகர் அப்படியல்ல. எப்போதும் துரு, துருவென இருப்பார். அதிரடியாக எதையும் செய்பவர். அவரது அதிரடியால் பல அடைமொழி பெயர்களால் அழைக்கப்பட்டார் முனிசேகர்.

முனிசேகரின் சொந்த ஊர் சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரம். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், சென்னையில் பல காவல் நிலையங்களில் பணியாற்றினார். குறிப்பாக, எழும்பூர், திருமங்கலம், அண்ணாசதுக்கம், கொளத்தூர், மதுரவாயல் ஆகிய காவல் நிலையங்களில் முனிசேகரை விசாரிக்க வேண்டும் என்றால் அவரை அடைமொழியுடன்தான் சக போலீஸார் பேசத் தொடங்குவார்கள். அந்தக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியினரும் அடைமொழியோடே முனிசேகரை அழைப்பார்கள்.

முனிசேகரைப் போல பெரியபாண்டியனும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால், ஆரம்பத்திலிருந்தே இருவரும் நெருங்கிப்பழகினர். அந்த நட்பும், கொளத்தூர் நகைக்கடை கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பிடிக்கக் காரணம். அதோடு பெரியபாண்டியன், முனிசேகரின் திறமையைப் பார்த்துதான் இருவரையும் ராஜஸ்தானுக்குக் கொள்ளையர்களைப் பிடிக்க அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் பெரியபாண்டியனை இழந்த சோகத்தோடு சென்னைத் திரும்பியுள்ளார் முனிசேகர். முனிசேகரைப் பொறுத்தவரை அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் நல்ல பெயர்தான் உள்ளது. அதோடு அதிரடியாக செயல்பட்டு உயரதிகாரிகளிடமும் நல்ல பெயரைத்தான் முனிசேகர் சம்பாதித்துள்ளார். குறிப்பாகக் காவல்துறையில் மீடியா நண்பர்களிடம் நெருங்கிப் பழகும் நபர்களில் முனிசேகரும் ஒருவர். அதே நேரத்தில் டூயூட்டியில் முனிசேகர் தனிப்பட்ட முத்திரையைப் பல வழக்குகளில் பதித்திருக்கிறார்" என்றனர். 

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த சில ஆண்டுக்கு முன்பு முனிசேகர், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். சாமி படத்தில் நடிகர் விக்ரம் போல சப்-இன்ஸ்பெக்டர் முனிசேகரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதால் சாமி என்றே அழைத்துள்ளனர். முனிசேகருக்கு நைட் டூயூட்டி என்றால் எழும்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் நள்ளிரவில் யாரும் உறங்க முடியாது. அதை மீறி யாராவது படுத்தால் முனிசேகரின் அதிரடியிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது. இதனால் பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்கள் போலீஸ் வாகனம் வந்தாலே சாமி வண்டி வருவது என்று அலறியடித்து ஓடிய கதையும் உண்டு. இன்னும் சிலர் முனிசேகர், மின்னல் போல டூயூட்டியில் செயல்படுவார். இப்போதுகூட  எழும்பூர் காவல் நிலையத்தில் முனிசேகரை விசாரித்தால் அவரது பெயரை 'மின்னல், சாமி' என்றுதான் சொல்வார்கள்.

அடுத்து, திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது, பெண் நீதிபதி ஒருவரின் மகனை  துணிச்சலாகப் பிடித்துச் சென்றுள்ளார்.  தடாலடியாக முனிசேகர், பெண் நீதிபதியின் மகனிடம் விசாரித்த விதம், அந்தக் காவல் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்தப் பிரச்னையை உயரதிகாரிகள் தலையிட்டு சுமுகமாக முடித்துவைத்தனர்.

கடந்த ஏழு ஆண்டுக்கு முன்பு மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றினார் முனிசேகர். அப்போது, அங்கு ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் கொலை வழக்கு முனிசேகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த ஒரு மணி நேரத்திலேயே பத்துப்பேரை அள்ளிக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, ஐ.பி.எஸ் அதிகாரி  ஒருவர் அங்கு இருந்துள்ளார். சுறுசுறுப்பாக முனிசேகர் செயல்பட்டதைப் பார்த்து முறுக்கு மீசை ஐ.பி.எஸ். அதிகாரி பாராட்டியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

சென்னையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையத்தில் முனிசேகர் திறமையாகவே பணியாற்றியிருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பெரியபாண்டியனும் சென்னையிலேயே பணியாற்றியுள்ளார். குற்றவாளிகளைப் பிடிப்பதில் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டதால் பல குற்றவழக்குகளில் தனிப்படையில் இடம்பிடித்தனர். நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டபோது முனிசேகர், பெரியபாண்டியன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நண்பர்களான இருவரும் சேர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க வியூகம் அமைத்துள்ளனர். ஆனால், அங்கு எதிர்பாராமல் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் இறந்ததால் வருத்தத்தில் இருக்கிறார் முனிசேகர். அவருடைய குடும்பத்தினரும், சக போலீஸாரும் ஆறுதல்கூறியும் அவர் இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை.

மீடியாக்களிலிருந்து தப்பிக்க, முகப்பேரில் தங்கியிருந்த வீட்டைக்கூட முனிசேகர் காலிசெய்துவிட்டார். இப்போது அவரது குடும்பம் இருக்கும் இடம் போலீஸ் உயரதிகாரிகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்கும் தெரியாது. 
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இழந்தது தமிழகக் காவல்துறைக்கு மட்டுமல்ல அவரது நண்பன் முனிசேகருக்கும் பெரும் இழப்பாகவே இருக்கிறது. முனிசேகரைச் சந்தித்த சக இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தைச்  மனம்விட்டுச்சொல்லியிருக்கிறார். இப்போதைய சூழலில் அவரால் எதையும் சொல்ல முடியாத தர்மசங்கடத்திலிருக்கிறார். முனிசேகருக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர், விளையாட்டு வீரர்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்