வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/12/2017)

கடைசி தொடர்பு:18:30 (23/12/2017)

உளுந்து செடியைத் தாக்கும் மஞ்சள் நோய்: நெல்லை மாவட்ட விவசாயிகள் வேதனை!

நெல்லை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயிறு செடிகளில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருப்பதால், மகசூல் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

உளுந்து சாகுபடி

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. விவசாய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் உயர்ந்துள்ளது. மழைக்காலத்தில் மானாவாரி சாகுபடியிலும் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். குறிப்பாக, சங்கரன்கோவில், குருவிகுளம், திருவேங்கடம், சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி மற்றும் கிணற்றுப் பாசானத்தின் மூலமாக சாகுபடி அதிகமாக நடைபெற்று உள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் பெய்த மழைக்குப் பின்னர், கம்பு, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயிறு, உளுந்து, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தொடர் மழையால் செடிகள் நன்றாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாசிப்பயறு, உளுந்து செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்டன, 

மஞ்சள் நோய் தாக்குதல்

உளுந்து, பாசிப்பயிறு செடிகளை இந்த நோய் தாக்கியுள்ளதால், செடிகள் காய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் எதற்காக ஏற்பட்டது என்பது பற்றியும் இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் வேளாண்மை துறை அதிகாரிகள் எந்தத் தகவலையும் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உளுந்து பாசிப்பயிறு பயிரிட ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் மகசூல் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.