ஜனாதிபதி வருகையால் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட வட மாநில பக்தர்கள்!

 

ராமேஸ்வரம் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வந்து சாமி தரிசனம் செய்த நிலையில், அந்த நேரத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் அனுமதிக்கபடாதது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முயன்றபோது திடீரென தடுக்கப்பட்டதால், அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி வருகையால் கோயிலில் பக்தர்கள் தவிப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இதனையொட்டி ராமேஸ்வரம் தீவு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. கோயிலின் ரதவீதிகளில் இரு சக்கர வாகனங்கள் கூட அனுமதிக்கபடவில்லை. கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதுடன், அந்தப் பகுதியில் பக்தர்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டது. அப்பகுதியிலிருந்த ஹோட்டல்களில் உணவருந்தி கொண்டிருந்தவர்கள் கூட சுமார் 2 மணி நேரம் அங்கேயே தடுத்துவைக்கப்பட்டனர்.

இதனால் கோயில் ரத வீதி பகுதிகள் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் விடுமுறை நாள் என்பதால் அதிக பக்தர்கள் கூடியிருந்த நிலையில் பகல் 11.50 மணியளவில் கோயிலுக்கு வந்த குடியரசுத் தலைவருக்காக காலை 10 மணி முதலே பக்தர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காமல் போலீஸார் தடுத்துவிட்டனர். இதனால் அக்னித் தீர்த்த கடலில் நீராடிவிட்டு வந்த ஏராளமானோர் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடச் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர். மேலும், குடியரசுத் தலைவரின் கோயில் வருகையை முன்னிட்டு பக்தர்கள் எந்த நேரம் வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற எந்த முன்அறிவிப்பும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலோ, காவல் துறையினராலோ செய்யப்படவில்லை. இதனால் வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸார் அந்த பக்தர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் மனம் நொந்த நிலையில் அங்கிருந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!