வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (24/12/2017)

கடைசி தொடர்பு:00:00 (24/12/2017)

நெல்லையில் மீண்டும் தலை தூக்கும் டெங்கு காய்ச்சல்: 13 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கத் தொடங்கி இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

டெங்கு காய்ச்சல் தடுப்பு

நெல்லை மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நோய் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த சுகாதாரக் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் முழு வீச்சில் நடந்ததைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. வடகிழக்குப் பருவமழை ஓய்ந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
 
நெல்லை, பணகுடியில் 22-ம் தேதி மணிகண்டன் என்பவரின் 4 மாத ஆண் குழந்தை டெங்குவால் உயிரிழந்தது. அதனால் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆகாஷ் தலைமையில் சுகாதாரக் குழுவினர், பணகுடி பகுதியில் சுகாதார ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்த குழந்தையின் வீட்டில் அவர்கள் விசாரணை நடத்தினார்கள். சுற்றுப்புறங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். பணகுடி பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்தவும் சுகாதாரக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர். 

இந்த நிலையில், திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற 8-ம் வகுப்பு மாணவன் மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தான். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அடுத்தடுத்து நடக்கும் மர்மக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியர் ஆய்வு

இந்தச் சூழலில், கீழப்பாவூர் அருகே உள்ள வினைதீர்த்தநாடார்பட்டி பகுதியில் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெறும் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். 

பின்னர், பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்த ஆட்சியர், அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள், கோயில் வளாகம் ஆகிய பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் அளவுக்கு சுகாதாரச் சீர்கேடு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார். சுகாதார பணியாளர்களிடம் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். பள்ளி மற்றும் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரான டாக்டர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.