"ஆர்.டி.ஓ உத்தரவிட்டும் பள்ளிக்கு போகும் வழி ஆக்ரமிப்பை அகற்றவில்லை" - புலம்பும் மக்கள்!

 

"ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே பசுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்ரமிபை அகற்ற ஆர்.டி.ஓ உத்தரவிட்டும்,ஓராண்டாகியும் ஆக்ரமிப்பு அகற்றப்படவில்லை" என்று பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

இதுபற்றி, அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். "இந்தப் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நன்கொடையாக நான்கு ஏக்கர் நிலம் பெறப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த பள்ளிக்குச் செல்ல காங்கேயம் சாலையில் இருந்து பசுவப்பட்டி ஊர்வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் மண்சாலை உள்ளது. சுமார் 25 அடி அகலமுள்ள இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்ற நபார்டு திட்டத்தின் மூலம் ஒப்புக்கொண்டபோதும், சாலையின் ஒரு இடத்தில் 6 அடிக்கு ஆக்ரமிப்பு உள்ளதால், பணி தொடங்கப்படாமல் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கச் சொல்லி பசுவப்பட்டி மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆக்ரமிப்பை அகற்றச் சொல்லி ஆர்.டி.ஓ உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும் இதுவரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலை அமைக்கமுடியவில்லை. மாணவர்கள் பள்ளிக்குப் போக நல்ல பாதை அமைக்க முடியவில்லை. பசுவப்பட்டி யூனியன் அதிகாரிகள் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மக்கள் அனைவரும் திரண்டு போய் யூனியன் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம்" என்றார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!