’கன்னியாகுமரி டு காஷ்மீர்!’ - மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை சைக்கிள் பயணம் | Cycling campaign at kanniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (24/12/2017)

கடைசி தொடர்பு:13:50 (24/12/2017)

’கன்னியாகுமரி டு காஷ்மீர்!’ - மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை சைக்கிள் பயணம்

விபத்தில் தனது இடது காலை இழந்த மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வடிவேல், கன்னியாகுமரி – காஷ்மீர் வரை சைக்கிளில் தன்னம்பிக்கையுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Confidential cycling trip

மதுரையைச் சேர்ந்தவர் வடிவேல். கடந்த 2012ம் ஆண்டில் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் வடிவேல் தனது இடது காலை இழந்தார். நண்பர்கள், உறவினர்களின்  ஊக்கத்தாலும் தனது தன்னம்பிக்கையாலும் பைக்கில் தனியாக 6,723 கி.மீ.,  தூரம் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு, “இந்தியா புக் ரெக்கார்டு” மற்றும் “லிம்கா புக் ஆப் ரெக்கார்டில்” இடம் பிடித்துள்ளார். இவரது அடுத்த முயற்சியாக ”கன்னியாகுமரி – காஷ்மீர்” வரை செல்ல முயற்சி எடுத்து வருகிறார்.

மதுரையிலிருந்து, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர் வழியாக கோவில்பட்டிக்கு வந்த வடிவேல், செய்தியாளர்களிடம் பேசுகையில், “ டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்துவிட்டு தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2012ல் விபத்தில் இடது காலை இழந்த பிறகு 2 ஆண்டுகள் வரை வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். நண்பர்கள், உறவினர்களின் ஊக்கத்தாலும், எனது தன்னம்பிக்கையாலும் நடக்கப் பழகினேன். பிறகு, சைக்கிள், பைக் ஓட்டப் பழகினேன். எனது பழைய இயல்பு நிலைக்கு மாற 6 மாதம் வரை ஆனது.

சிறுவயதிலிருந்தே எனக்கு சைக்கிள் பயணத்திலும் ஆர்வம் இருந்ததால் சைக்கிள், பைக்குகளில் பயணம் மேற்கொண்டேன். எனது 6,723 கி.மீ தூரம் வரை இந்தியா முழுவதும் பல பகுதிகளில் சென்று வந்த எனது முதல் பயணத்தின் அடுத்தகட்டமாக சைக்கிளில் கன்னியாகுமரி  முதல் காஷ்மீர் வரை செல்லலாம் என திட்டமிட்டேன். இதற்காக சைக்கிள் ஓட்டி பயிற்சி பெற்றுள்ளேன். தற்போது மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து எனது சைக்கிள் பயணத்தை துவக்க இருக்கிறேன்.

Confidential cycling trip from kanniyakumari to kashmir

ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் ஊக்கப்படுத்தினால் நிச்சயமாக ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும், ஒவ்வொரு வகையில் சாதனை புரிய முடியும். இவர்கள் ஊக்கம், தைரியத்துடன் தனது தன்னம்பிக்கையும் சேர்வதால் தான் ஓர் மாற்றுத்திறனாளி என்பதை மறந்து இயல்பு வாழ்க்கை வாழ முடிகிறது. தன் உடல் குறைபாட்டை மறந்து ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சாதனை படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறேன்.” என்றார்.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க