”தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என கனவுகூடக் காணக்கூடாது”: பாலபாரதி

”தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என பா.ஜ.க கனவுகூடக் காணக்கூடாது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கூறியுள்ளார்.

பாலபாரதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி முகநூலில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, ”ஸ்லீப்பர் செல்களை நசுக்காதவரை மாற்றுக்கொள்கை தமிழகத்தில் வேர்விடாது” எனக் கோபமாக பதிவு செய்திருந்தார். அது தொடர்பாக அவரிடம் பேசினோம். ‘‘ஜனநாயகத்தை படுகொலை செய்து, பணநாயகத்தை முன்னெடுத்துச் செல்லும் செயல் சமீபகாலமாக தமிழக அரசியலில் அதிகரித்து வருகிறது. வாக்களர்களுக்கு எப்படியாவது பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடவேண்டும் என்ற எண்ணம் ஒரு நோயாகவே பரவி வருகிறது. தேர்தல் ஆணையம் தலையீடு சரியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு உதவியாக இருப்பது மாநில அதிகாரிகளும் காவல்துறையும் தான்.

தேர்தல் ஆணையத்துக்கென்று தனியாக காவல்பிரிவு இல்லாத வரை, இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும். பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி பணபலம், அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்று வருவதை தொடர்ச்சியாகவே நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முறை ஆளும் அ.தி.மு.க-வால் வாக்குகளைப் பெறமுடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வுக்கும் மிகமிக மோசமான வாக்குகளே கிடைத்திருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்துகொண்டு மாநிலத்தில் ஆளும்கட்சியை கைப்பாவையாக மாற்றி இயக்கினார்கள். ஆக, மாநில நலனை மறந்து தங்கள் சுயநலனுக்காக செயல்பட்ட அ.தி.மு.க-வை கூட்டு சேர்த்துக்கொண்டு மாநில நலனுக்கு எதிராக செயல்பட்ட மத்திய அரசு, என இரண்டுக்கும் சரியான சம்மட்டி அடிகொடுத்திருக்கிறார்கள் ஆர்.கே. நகர் மக்கள்.

இந்த இடைத்தேர்தல் மூலமாக நடந்துள்ள நல்ல விஷயம் பா.ஜ.க-வுக்கு கிடைத்துள்ள மரண அடி. முற்போக்கு சிந்தனைகள் அதிகரித்துள்ள தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் காலூன்றவே முடியாது என்பதை இந்த முடிவுகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்டியிருக்கின்றன. பா.ஜ.க-வை ஒரு கட்சியாகவே மக்கள் கருதவில்லை. ஆக, இனி தமிழகத்தில் காலூன்றலாம் என்ற கனவுக்கூட பாஜகவுக்கு தோன்றாது என நினைக்கிறேன்.

அதே நேரத்தில் ஆர்.கே நகர் முடிவு மட்டும் ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானித்து விடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது ஸ்லீப்பர் செல்கள் அதிகரித்து விட்டார்கள். இவர்களால் தான் அரசியல் மோசமானதாக மாறி வருகிறது. உண்மையான ஜனநாயகம் மலர வேண்டுமானால் பணநாயகத்தை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே நேரத்தில் ஸ்லீப்பர் செல்களை மூட்டைப்பூச்சிகளைப் போல் நசுக்க வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை ஒழிக்காதவரை மாற்றுக்கொள்கை தமிழகத்தில் வேர்விடாது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!