செல்போனால் ஏற்படும் விபரீதங்கள்: விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் குடில்

செல்போனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் இசிதோர் பர்னாந்து.  

Christmas show plant about cellphone abuses

தூத்துக்குடி, புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் இசிதோர் பர்னாந்து. தீவிரவாத ஒழிப்பு, மதநல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியின் அவசியம் என  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தன் வீட்டில் அமைக்கப்படும் கிறிஸ்துமஸ் குடிலின் ஒரு பகுதியை விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைத்து வருகிறார். இந்த ஆண்டு செல்போனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண ஓவியங்களை வரைந்து தன் வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். 

இதுகுறித்து சிதோர் பர்னாந்துவிடம் பேசினோம், "எல்லா கண்டுபிடிப்புகளிலுமே நன்மையைப் போல தீமையும் கலந்திருக்கிறது. அதிகமான பயன்பாட்டால்தான் தீமைகளும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ’செல்போனில் அதிகம் பேசுவதாலும், இதிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகளாலும் மூளையில் கட்டிகள் ஏற்பட்டு அது மூளைப் புற்றுநோயாக மாறும்’ என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கதிர்வீச்சால் தூக்கம் பாதிக்கப்படும், நரம்புத்தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்துள்ளனர். செல்போனால் ஏற்படும் ஆபத்தை மக்கள் யாரும் உணரவில்லை. 

Christmas awareness plant

செல்போன்களில் தொடர்ந்து பேசுவது, மெசேஜ் அனுப்புவது, வாட்ஸ் அப், பேஸ் புக், டுவிட்டர் போன்ற சமூக வளைதளங்களிலும் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் மந்தம் ஏற்பட்டு மதிப்பெண் குறைகிறது.  படித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள், பெண்களின் கவனம் சிதறுகிறது. இதனால் போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது. 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசிக்  கொண்டே செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. பயணங்களின் போதும், அதிக நேரம் செல்போனில் பேசுவதாக இருந்தால் செல்போனில் பேசுவதைத் தவிர்த்து ஹெட்போன் அல்லது புளூடூத்தில் பேச வேண்டும். செல்போனால் தீமைகள் மட்டுமே ஏற்படுவதில்லை. அனைவருக்கும் ஏற்ற மிகச்சிறந்த தகவல் பரிமாற்ற சாதனம் செல்போன் தான். செல்போனின் தீமைகளை உணர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த ஆண்டு செல்போனின் அதீத பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறித்துமஸ் குடிலில் இது குறித்த விழிப்பு உணர்வு ஓவியம் வரைந்து வைத்துள்ளேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதைப் பார்த்துச் செல்கின்றனர். அனைவரிடமும் இதன் தீமைகள் குறித்து ஒவ்வொரு ஓவியத்தின் மூலம் விளக்கிச் சொல்லி வருகிறேன்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!