வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (24/12/2017)

கடைசி தொடர்பு:16:00 (24/12/2017)

’ஜெய் ஜெய் தினகரன்.. ஜெயித்து விட்டார் தினகரன்!’ -நெல்லையைக் கலக்கிய கோஷம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் பெற்றுவரும் வெற்றி முகத்தை அவரது ஆதரவாளர்கள் நெல்லையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

தினகரன் ஆதரவாளர்கள்

அ.தி.மு.க-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரக்கூடிய நிலையில், நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அ.தி.மு.க-வினரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கொக்கிரகுளம் பகுதியில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வரப்போவதாக இரு அணிகளின் தரப்பிலும் இருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.

ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் தினகரன் கை ஓங்கியதால், அ.தி.மு.க-வினரிடம் சோகம் பற்றி கொண்டது. அத்துடன், எப்போதும் அதிகமாகக் கூடக்கூடிய அ.தி.மு.க தொண்டர்களின் வழக்கமான கூட்டமும் வரவில்லை. நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவரான தச்சை கணேசராஜா தலைமையில் ஒரு சில தொண்டர்கள் மட்டுமே வந்து அவசரமாக மாலை அணிவித்துவிட்டுச் சென்று விட்டனர்.

அதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் பாளையங்கோட்டை பகுதிச் செயலாளர் அசன் ஜாபர்அலி, முன்னாள் துணை மேயர் கணேசன் உள்பட ஏராளமான தொண்டர்கள் அணி வகுத்து வந்தார்கள். மிகுந்த உற்சாகத்துடன் இருந்த தொண்டர்கள், பிரஷர் குக்கர் சின்னத்தை தூக்கிக் காட்டியபடி மகிழ்ச்சி அடைந்தனர். ஆ.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

குக்கருடன் தொண்டர்கள்

எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த தினகரன் ஆதரவாளர்கள், ’ஜெய் ஜெய் தினகரன்.. ஜெயித்து விட்டார் தினகரன்..’ எனக் கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தார்கள். அ.தி.மு.க-வினருக்கு வந்ததை விடவும் தினகரன் அணியினருக்கு கூட்டம் அதிகம் வந்திருந்ததைப் பார்த்த பொதுமக்கள், ’இடைத்தேர்தல் ஒரு சில சுற்று முடிவுகளிலேயே தொண்டர்கள் பெருமளவுக்கு தினக்ரன் அணியின் பக்கமாக வந்து விட்டார்களே, முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் என்ன நடக்குமோ?’ எனப் பேசியபடி சென்றார்கள்.