விழாக்கோலம் பூண்டுள்ள வேளாங்கண்ணி! | Velankanni at festive mode

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/12/2017)

கடைசி தொடர்பு:21:00 (24/12/2017)

விழாக்கோலம் பூண்டுள்ள வேளாங்கண்ணி!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ஐந்து கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று என்ற சிறப்பையும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாகக் கிடைக்கக்கூடிய ’பசிலிக்கா’ என்ற பெருமையையும் பெற்றது வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம்.  எல்லா மதத்தினரும் வணங்கும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்தக்காட்டாய் விளங்கும் ஆலயம் இதுவாகும். நாளை (25.12.2017) நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப் பேராலயத்தில் பல மொழிகளில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் கலந்துகொள்வதை கிறிஸ்தவர்கள் பாக்கியமாகக் கருதுகிறார்கள். எனவே, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் கலந்துகொள்ள தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களிலிருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.  

இந்தாண்டு சனி, ஞாயிறு விடுமுறை தினங்களைத் தொடர்ந்து திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் நேற்று முதலே வேளாங்கண்ணியில் கூட்டம் அதிகரித்துவிட்டது.  இங்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதிலும், பழைய மாதாக் கோயிலுக்கு மண்டியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.  பேராலய வளாகம் முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.  கிறிஸ்துமஸ் அன்று விடியற்காலை ஏசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வேளாங்கண்ணியே விழாக்கோலம் பூண்டுள்ளது.