"ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகிய நான்...!" - தினகரனின் திடீர் குபீர் அறிக்கை

நாட்டின் மதச்சார்பற்றக் கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ என்று குறிப்பிட்டு டி.டி.வி.தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், 'உன்னைப் போல பிறரையும் நேசி என்கிற உயர்ந்த தத்துவத்தைப் போதித்து, சகோதரத்துவத்தையும், அன்பையும் எடுத்துரைத்த, தேவகுமாரனாம் இயேசுகிறிஸ்து அவதரித்த பொன்னாளாம் கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

நம்கொரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்கிற வேத வாக்கியத்தை தேவன் நிறைவேற்றிய காலம் கிறிஸ்துமஸ்  காலம் அன்பை, எளிமையை, மன்னிக்கும் குணத்தை, ஈகையை, இதயத்தூய்மையை, இறைவன் மீது நான் கொள்ளவேண்டிய விசுவாசத்தை, பிரசங்கித்த இயேசுநாதரை எல்லோரும் போற்றிடுவோம். 

ஏழைகளுக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்' என்கிற இயேசு கிறிஸ்துவின் வாக்கியத்தின்படி, ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை தங்கள் குணமாகவே கொண்ட எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கிறிஸ்துவத்தின் மீதும் கிறிஸ்துவ மக்களின் மீதும் எப்போதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்கிறேன். 

அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் போதித்த போதனைகளை இதயத்தில் தாங்கிய கிறிஸ்துவ மக்கள், தூய தொண்டினை மக்களுக்கு ஆற்றும் வகையில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகத்திலும் அவர்களின் பணி என்றும் போற்றத்தக்கது. தொடர்ந்து இந்த அன்பின் நற்செய்தியும், நற்செயலும், தங்கு தடையின்றி தமிழகத்தில் தழைத்து ஓங்கிட எப்போதும் நாம் துணை நின்றிடுவோம். நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கிலும் வாழும் என் அன்பு கிறிஸ்துவ சகோதரர்களுக்கு, மீண்டும் ஒருமுறை இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!