120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு... பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்! | Coimbatore: Fire Department rescued a Cow which fell into a deep well

வெளியிடப்பட்ட நேரம்: 01:20 (25/12/2017)

கடைசி தொடர்பு:01:20 (25/12/2017)

120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு... பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

கோவையில் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாட்டை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பசு

கோவை ஆலந்துறை அருகே மத்வராயபுரத்தில் கிணறு உள்ளது.  120 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில்  15 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று காலை அந்த கிணற்றில், எதிர்பாராதவிதமாக 2 வயது மதிக்கத்தக்க பசுமாடு ஒன்று தவறிவிழுந்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். கோவை தெற்குப் பகுதியின் மூத்த தீயணைப்பு வீரர் ரவிச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஜெயச்சந்திரன், ராஜூ,  சிவக்குமார், காசிமாயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு, ஒரு தீயணைப்பு வண்டியில் வந்தனர்.

பசுமாடு

இதைத்தொடர்ந்து, கிணற்றில் இருந்த செடி, புதர் மற்றும் மரங்களை வெட்டி இரண்டு தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன், ஒன்றரை மணி போராட்டத்துக்குப் பிறகு, மாடு பத்திரமாக மீட்கப்பட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட பசு மாடு, இரண்டு மாதம் கர்ப்பிணி. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் மாட்டுக்கு ஒன்றும் ஆகவில்லை.