மதுசூதனன் தோல்விக்குப் பின்னால் இருந்தது ஸ்லீப்பர் செல்களா? | Is Sleeper cells are the reason for madhusudanan's defeat

வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (25/12/2017)

கடைசி தொடர்பு:10:11 (25/12/2017)

மதுசூதனன் தோல்விக்குப் பின்னால் இருந்தது ஸ்லீப்பர் செல்களா?                     மதுசூதனன்  பிரசாரத்துக்கு கிளம்பிய போது

துசூதனன் தோல்விக்கு, அ.தி.மு.க.வில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் காரணமா என்ற கேள்வி மற்றும் ஆராய்ச்சியுடன் அ.தி.மு.க.வின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகர்த் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அ.தி.மு.க., மோசமான தோல்வியைச் சந்தித்ததால் அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை, கட்சியின் தலைமைக் கழகத்தில் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  மற்றும் கட்சியின்  முக்கிய நிர்வாகிகள், மந்திரிகள் இதில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களையும் பங்கேற்கும்படி தலைமைக் கழகம்  உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                            டி.டி.வி., ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்

ஆர்.கே.நகர்த் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன், வெற்றிப்படிக்கட்டில் ஏறிக் கொண்டிருக்கும் போதே  அ.தி.மு.க. எம்.பி.யான செங்குட்டுவன், டி.டி.வி. தினகரனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் செங்குட்டுவன், தினகரன் ஆதரவு நிலையில் இருந்து வாபஸ் ஆகி, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிக்கு வந்தார். அதே வேகத்தில் மீண்டும் தினகரனை நோக்கி ஓட்டம் பிடித்துள்ளார். இப்படிப் பலர் மீண்டும் தினகரனை நோக்கி ஓடக் கூடும் என்ற கருத்தும் பரவி வருகிறது. தினகரனின் தீவிர ஆதரவாளர்களான தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகிய எம்.எல்.ஏ.க்கள், "எங்கள் ஸ்லீப்பர் செல்கள்,  ஆளுங்கட்சிக் கூடாரத்தில் நிறைய  இருக்கிறார்கள்" என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில்தான் அ.தி.மு.க.வின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம்,  'தலையை எண்ணிப் பார்க்கும்' கூட்டமாகவே அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தோல்விக்கான காரணம், உள்கட்சி விவகாரம்தான் என்ற ஒரு கருத்தும் உள்ளதால் அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் படலாம் என்று தெரிகிறது.